துறையை தேர்வு செய்வதில் உங்களது தேர்வு சரியானதா?

தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இத்தருணம், அடுத்து உயர்கல்வியை நோக்கிய பயணம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில், மகிழ்ச்சியையும் பதட்டத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது.

கற்றல் என்பது வாழ்வில் ஒரு உன்னதமான செயல். கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, முறைபடுத்தப்பட்ட கல்வி கற்பது என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது. அறியாமையை போக்கி, அறிவு வளத்தை மேம்படுத்தி, எதிர்கால வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் காரணியாகவும் நாம் கற்கும் கல்வி விளங்குகிறது. அத்தகைய உன்னத செயலுக்கு அடித்தளமிடும் இத்தருணத்தை முறையாக கையாளுங்கள். உங்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்யும் முன், சுய மதிப்பீடு செய்து கொள்வது உகந்தது.

உங்களது வாழ்வில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு மட்டுமே உள்ளது. அத்தகைய உரிமையை சரியாக பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது.
கலை, அறிவியல், சட்டம், வேளாண்மை, மருத்துவம், பொறியியல், மேலாண்மை, கால்நடை அறிவியல் என ஏராளமான துறைகளில் நூற்றுக்கணக்கான படிப்புகள் உள்ளன. முதலில் தனக்கு எந்த துறையை தேர்வு செய்ய முடியும் என்ற அடிப்படை அறிவு பெற வேண்டும்.

உதாரணமாக, பிளஸ் 2 அளவில் பொருளாதாரம், வணிகவியல் பிரிவில் படித்தவர்களால் அறிவியல் சார்ந்த படிப்பிலோ, மருத்துவப் படிப்பிலோ சேர முடியாது; உங்கள் பிரிவு சார்ந்த படிப்புகள் என்னென்ன? கூடுதல் தகுதிகள் ஏதேனும் தேவையா? அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் எவை? அவற்றில் சிறந்தவை மற்றும் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவை எவை? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

தங்களது ஆர்வம், திறமை, இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தங்களுக்கு உகந்த படிப்பை தேர்வு செய்யலாம். தங்களது ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்களது கருத்துக்கள் அதற்கு தாராளமாக உதவலாம். ஆனால், யாருடைய ஆதிக்கத்தினாலும் முடிவு எடுப்பது சரியல்ல; இறுதி முடிவு மாணவரின் முழு மனநிறைவுடன் எடுக்கப்பட்டதாக இருப்பது அவசியம்.

ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவின் மீது கண்மூடித்தனமான விருப்பம் இருக்கலாம். அப்பாடப்பிரிவை விரும்புவதற்கான காரணங்களை பட்டியலிடுங்கள். உங்களுக்கே ஒரு தெளிவு இருப்பதையும், உங்களது லட்சியத்திற்கு உதவும் என்பதை அத்தகைய காரணங்கள் உண்மையில் உங்களுக்கு உணர்த்துமானால் அது சிறந்த தேர்வாக இருக்க முடியும். மாறாக, அற்ப காரணங்களாக அது இருக்குமானால் உங்களை சுயபரிசோதனை செய்துகொண்டு தேர்வு செய்வது உகந்தது.

உதாரணமாக, உங்களது நண்பர் தேர்வுசெய்ய உள்ளார் என்பதற்காக நீங்களும் அதே பாடப்பிரிவை தேர்வு செய்வது சரியல்ல. இன்றும், தெளிவான சிந்தனையும், உண்மையான ஆர்வமும் இன்றி மாயையில் ஒரு படிப்பை தேர்வு செய்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது வேதனைக்குரியது.

தரமான மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு என்பது அனைத்து துறையிலும் என்றுமே உண்டு. இதற்கு திறமையான அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இடம்பெற்றுள்ள தரமான கல்லூரிகளும் முக்கிய காரணமாக அமையலாம். அதையும்விட, அந்த துறையில் உண்மையான ஆர்வமும், தெளிவும், நம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எனவே, எந்த படிப்பாக இருந்தாலும் அறியாமையில் தேர்வு செய்யாதீர்கள். படிப்பின் பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, உலக சந்தையில் அத்துறையின் நிலை, எதிர்கால வாய்ப்புகள், படிப்பிற்கு பிறகான உங்களது திட்டம் போன்றவற்றையும் கருத்தில்கொண்டு உங்களுக்கான படிப்பை தேர்வு செய்யுங்கள். அந்த துறையில் உரிய அறிவையும், திறனையும் வளர்த்துக்கொள்ளுங்கள் வாழ்க்கை பிரகாசமாகும்!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி