பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித தர பட்டியலை இணையத்தில் வெளியிட அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பூபால்சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 500க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்காக பெரும்பாலான கல்லூரிகள் விளம்பரம் வெளியிட்டு வருகின்றன. இதில் எந்த கல்லூரியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என்று கண்டுபிடிக்க முடியாமல் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

எனவே, ஒவ்வொரு கல்லூரியும் தங்களது கல்லூரியில் கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் கல்லூரிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள் உள்ளன என்று ரேங்க் பட்டியல் தயாரித்து, அந்த பட்டியல் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் விளம்பரம் வெளியிட உத்தரவிடவேண்டும். அண்ணா பல்கலை இணைய தளத்திலும் வெளியிட வேண்டும்.மேலும் ஒரே பெயரில் பல கல்லூரிகள் செயல்படுவதை தடுக்கவேண்டும். அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை தற்காலிக தலைமை நீதிபதி அக்னி கோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த மாதம் விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். அதன்படி இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

1. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை தயாரிக்க வேண்டும். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் இணைய தளத்தில் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டது. அதுபோல கடந்த ஆண்டின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடவேண்டும். 

2. இந்த கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தயார் செய்து அதை விளம்பரம் செய்ய வேண்டும். 

3. ஒரே பெயரில் பல கல்லூரிகள் நடத்தப்பட்டு இருந்தால் அதை கண்டுபிடித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

4. அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், இதர பொறியியல் கல்லூரிகளை தவறாமல் அவ்வப்போது ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் உள்ளதா என்று அண்ணா பல்கலை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிக்கை தயார் செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். 

5. பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சில் தொடங்குவதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை தயார் செய்து அதை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும், 2 வாரத்துக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி