இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு குடும்பநல நிதி தராமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்

இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு, குடும்ப நல நிதி வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. குடும்ப நல நிதியை 8 வாரத்துக்குள் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தட்டச்சர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பாண்டிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

எனது மனைவி கீதா, நெல்லையில் உள்ள கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் தட்டச்சராக 2007–ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில், எனது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டார். தற்காலிக பணிக்காலம் என்பதால் மருத்துவ விடுப்பு கொடுக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், சம்பளம் இல்லாத விடுப்பில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து எனது மனைவி வேலைக்கு செல்லாததால் அலுவலக பணி பாதிக்கப்படுவதாக கூறி அந்த பணியிடத்தை கால்நடைத்துறை இணை இயக்குனர் கலெக்டரிடம் திரும்ப ஒப்படைத்தார். இந்த நிலையில் 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டார்.

நியாயமற்றது
அரசு ஊழியர் இறந்து விட்டால் குடும்ப நல நிதியாக 1½ லட்சம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப நல நிதிக்காக எனது மனைவி சந்தா தொகை செலுத்தி வந்தார். இதனால், குடும்ப நல நிதியை வழங்கக்கோரி கால்நடைத்துறை இணை இயக்குனரிடம் மனு கொடுத்தேன். ஆனால், மருத்துவ சிகிச்சையில் இருந்த போது குடும்ப நல நிதிக்கான சந்தா தொகையை செலுத்தவில்லை என்று கூறி குடும்ப நல நிதி வழங்க கால்நடைத்துறை இணை இயக்குனர் மறுத்து விட்டார். இது நியாயமற்றது.

குடும்ப நல நிதிக்காக குறிப்பிட்ட சில காலங்கள் சந்தா செலுத்தாவிட்டாலும் கூட, வேலைக்கு திரும்பிய பின்பு அந்த சந்தா தொகையை பிடித்தம் செய்து கொள்ளலாம் என்றும், குறிப்பிட்ட சில காலங்கள் மட்டும் சந்தா செலுத்தாத காரணத்துக்காக குடும்ப நல நிதி மறுக்கக்கூடாது என்று விதியில் கூறப்பட்டுள்ளது. எனவே, குடும்ப நல நிதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கண்டனம்
இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் நெல்லை வக்கீல் வி.கண்ணன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–

மனுதாரரின் மனைவி உயிர்கொல்லி நோயான புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள விடுப்பு கொடுக்காமல் அவரது பணியிடத்தை திரும்ப ஒப்படைத்தது நியாயமற்றது. அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. மனுதாரருக்கு 8 வாரத்துக்குள் 6 சதவீத வட்டியுடன் குடும்ப நல நிதியை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி