புதுடில்லி:மொபைல் போன் வாடிக்கையாளர்கள் விரைவான இணையதள சேவை பெறும் வகையில், குறைந்தபட்ச இணையதள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்ளது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, '2ஜி' மற்றும் '3ஜி' தொழில்நுட்பத்தில் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.
மேற்கண்ட பிரிவுகளில் வழங்கப்படும் இணையதள சேவை குறிப்பிட்ட வேகத்தில் இல்லை எனவும், தகவல்களை பதிவிறக்கம் செய்யும் வேகம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் மொபைல் போன் வாடிக்கையாளர்களிடமிருந்து 'டிராய் அமைப்பிற்கு அதிகளவில் புகார்கள் வந்தன.இது குறித்து, 'டிராய்' அமைப்பு விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் இணையதள சேவை வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது.