இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வமில்லை.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை, உள்ளிட்ட காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்து விட்டு தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பர். ஆறு முதல் பத்து ஆண்டுகளில் அவர்கள் பிளஸ் 2வில் படித்த பாடப்பிரிவை பொறுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வீடு தேடி வரும்.இதனால், பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவ-மாணவியர் டாக்டர், இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதை தவிர்த்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தனர். இதனால், நாளுக்கு நாள் மவுசு கூடியது, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அதிகம் உருவானது.

லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கும் நிலை ஏற்பட்டது.இதற்கு முன், அந்தந்த பயிற்சி நிறுவனங்களில் பணம் கட்டி படிக்கும் நிலை இருந்தது. தற்போது, அரசு சார்பில் விண்ணப்பம் விநியோம் செய்யப்பட்டு ஒற்றை சாளரமுறையில் அனைத்து கல்லூரிகளுக்கும் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையோர் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் பதிவு மூப்பு பின்னுக்கு தள்ளப்பட்டது. டி.இ.டி. தேர்வில் வெற்றி பெற்றால் உடனே ஆசிரியர் வேலை. அவர்கள், கடந்த ஆண்டு முடித்தவர்கள் ஆனாலும் பத்து ஆண்டுகளுக்கு முன் முடித்தவர் ஆனாலும் சரி. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த டி.இடி. தேர்வில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்து விட்டனர். மேலும் பல்லாயிரம் பேர் டி.இ.டி.தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.இதனால், முன்பு போல் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன், பதிவு மூப்பு அடிப்படையில்வேலை என்ற நிலை மாறிவிட்டது. மேலும் பல்லாயிரம் பேர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளனர். இது போன்ற நிலையால், இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு தேனி மாவட்டத்தில் ஆர்வம் குறைவாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 14ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 2 ம் தேதி ஆகும்.ஆனால், இது வரை சி.இ.ஓ. அலுவலகத்தில் 9 விண்ணப்பங்களும், டயட்டில் 88 விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி