டிரோஜன் என்றால் என்ன?
ட்ராய் என்ற நகருக்கு எதிராக இருந்தது கிரேக்க நாடான ஸ்பார்ட்டா. இரண்டு நகரங்களுமே எலியும் பூனையுமாக எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும். டிராய் நகரை கைப்பற்றுவதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது, ஸ்பார்ட்டா. இதனை அறிந்த ட்ராய் மக்கள் ஸ்பார்ட்டா படையை தடுப்பதற்காக நகரை சுற்றி 20 அடி உயரத்தில் பலமான சுற்றுச்சுவர் எழுப்பினர்.
அந்த சுவர் மிகவும் பலம் வாய்ந்தது. மூடி இருக்கும் ஒரு இரும்புக்கதவை திறந்தால்தான் ட்ராய் நகருக்குள் நுழைய முடியும். ஸ்பார்ட்டா மன்னன் ஓடி யசியஸ் சூழ்ச்சி செய்து, ட்ராய் நகரை கைப்பற்ற நினைத்தான். அதன்படி ஒரு போரை நடத்தினான். அதில் வேண்டுமென்றே தோற்றான். பின்னர், உங்களோடு சண்டைபோடும் அளவிற்கு எங்களுக்கு பலம் இல்லை. எங்கள் தோல்வியை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உங்களின் வீரத்திற்கு பரிசளிக்க நினைக்கிறோம்' என்று ட்ராய் மன்னனுக்கு தூது அனுப்பினான். சூழ்ச்சி தெரியாமல் பரிசை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டார்.
ஸ்பார்ட்டா வீரர்கள் மரத்தினால் பெரிய குதிரை பொம்மையை வடிவமைத்தார்கள். அதன் உட்பகுதியில் 30 பலம் வாய்ந்த வீரர்கள் பதுங்கிக் கொண்டார்கள். அந்த குதிரைக்கு'ட்ரோஜன் ஹார்ஸ்' என்று பெயர் வைத்தார்கள்.
அந்த குதிரையை டிராய் கோட்டைக்கு கொண்டு வந்தார்கள். வாசலில் நிறுத்திவிட்டு மன்னனை வணங்கினர். ட்ராய் மக்கள் உற்சாகமாக பரிசை ஏற்றுக்கொண்டனர். இரும்புக் கதவை திறந்து கொண்டு குதிரையை உள்ளே இழுத்துச் சென்றனர். ட்ராய் அமைச்சர்கள் அந்த குதிரையை எரித்து விடலாம் என்று யோசனை சொன்னார்கள். ஆனால், இது நம் வீரத்துக்கான பரிசு, ஆண்டாண்டுகாலமாக இதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறி மன்னர் மறுத்துவிட்டார்.
அன்றிரவு ட்ராய் நகரமே வெற்றி விழா கொண்டாடியது. கேளிக்கை முடிந்தபின்னர் மக்களும் படை வீரர்களும் உறங்கச் சென்றுவிட்டனர். ஏறக்குறைய அனைவரும் மது போதையில் வேறு இருந்தனர். இந்த சமயம் பார்த்து குதிரைக்குள் இருந்த ஸ்பார்ட்டா வீரர்கள் குதிரையில் இருந்து வெளியே வந்தனர். காவலுக்கு நின்றிருந்த ஒரு சில வீரர்களை குத்திக் கொன்றனர். இரும்புக்கதவை திறந்துவிட்டனர். வெளியே காத்திருந்த ஸ்பார்ட்டா வீரர்கள் கோட்டைக்குள் நுழைந்தனர். முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி ட்ராய் நகரத்தை கைப்பற்றினர்.
சரி இதற்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்?
அத்து மீறி திருட்டுத்தனமாக தந்திரமாக நுழைந்த இந்த ட்ரோஜன் ஹார்ஸ் வீரர்கள் போல வைரஸ்களும் எதிர்பாராமல் கம்ப்யூட்டரை தாக்குவதால், கணிணி வைரஸ்களுக்கு'ட்ரோஜன் வைரஸ்' என்று பெயரிட்டனர்.
ட்ரோஜன் ஹார்ஸ் என அழைக்கப்படும் வைரஸும் இந்த கதையில் கிடைக்கும் மரக் குதிரை போலதான் செயல்படுகிறது. வெளித் தோற்றத்தில் நல்ல புரோகிராம் போலத் தோற்றமளிக்கும் இது உண்மையில் பலமான அழிவை உண்டாக்கும் புரோகிராமாகும். புரோகிராமில் கூடுதலாக சில கோட் வரிகள் தரப்பட்டிருக்கும். அவை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கம்ப்பியூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை எடுத்து இந்த புரோகிராம் அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அல்லது கம்ப்பியூட்டரில் உள்ள டேட்டாவை கெடுக்கும் அல்லது அழிக்கும். இதில் மோசமான ட்ரோஜன் வைரஸ் புரோகிராம் எது என்றால் உங்கள் கம்பியூட்டரில் வைரஸ் உள்ளது. இந்த லிங்க்கில் உள்ள புரோகிராமினைப் பயன்படுத்துங்கள், வைரஸ் நீக்கப்பட்டுவிடும் என்று அறிவித்து அதற்கு நேர்மாறாக கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்பும் புரோகிராம் தான்.
இதிலிருந்து தப்புவதற்கான வழிகள்?
அவ்வப்போது ஆண்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். தேவையில்லாத அட்டாச்மெண்ட்களைத் திறக்காதீர்கள். உங்கள் நண்பர்களிடமிருந்து வந்தது போல் தோற்றமளிக்கும் இமெயில்களைத் திறக்காதீர்கள். இலவசமாக ஸ்கேன் செய்திடலாம், வைரஸ்களை நீக்கிடலாம் என்று வரும் புரோகிராம்களிருந்து தள்ளியே நில்லுங்கள்.