ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல்!


மாணவர்களுக்கான வகுப்பறை வேலை நாட்கள் என அரசு அறிவித்து அது கையேடாகவும், நாட்காட்டியாகவும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே வகுப்புகள், தேர்வுகள் நடைபெற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல், 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பாடத்தையும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பாடத்தையும் முன் கூட்டியே பயிற்றுவிக்கக் கூடாது என்றும் அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த வகுப்புப் பாடப் புத்தகங்களைத் தான் கற்பிக்க வேண்டுமெனவும் ஆணை பிறப்பித்துள்ளது அரசு.

இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு இன்னமும் ஆரம்பிக்காத போது, இப்போதே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 75% சதவீத பாடங்கள் முடிக்கப்பட்டுவிட்டன.

மாணவ மாணவியர் சர்வ சாதாரணமாக பள்ளி சீருடையில் கோடை விடுமுறை நாட்களில் இப்போது பள்ளிக்கு சென்று வருகின்றனர். இது சரியா? இதை அரசும் ஊக்குவிக்கிறதா? அல்லது அதிகாரிகள் தெரியாதது போல் இருக்கிறார்களா என்று புரியவில்லை.

ஒரு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களில் மட்டும் பயிற்றுவித்து மாணவர்களின் திறனை சோதிக்காமல்,கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக பாடம் நடத்தி, சிறு சிறு தேர்வுகள் வைத்து மாணவர்களை அதுவும் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்த்து தேர்ச்சி சதவீதத்தை கூறி தம்பட்டமடித்துக் கொள்வது கோமாளித்தனம் மட்டுமன்றி வேறென்ன?

இதையே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்ய இயலுமா? விடுமுறை நாளில் ஒரு நாள் சிறப்பு வகுப்பு எடுத்தாலும் குற்றமாக கருதப்படும்.ஆசிரியர்கள் வந்து காத்திருந்தாலும் மாணவ்ர்கள் வருவது இல்லை.பெற்றோரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. இவ்வளவிற்கும் தனியார் பள்ளிகளைப் போல இல்லாமல் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஓராண்டே பாடம் நடத்தப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் வரவில்லை என்றாலும் கண்டிக்க முடியவில்லை. நிறைய மாணவர்கள் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கூட பள்ளிக்கே வராமல் நேராக அரசுப் பொது தேர்விற்கு செல்லும் அவலமும் தொடர்கிறது. இதையெல்லாம் தனியார் பள்ளிகளில் அனுமதிப்பார்களா?

அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இன்னமும் குறை கூறும் புண்ணியவான்களுக்கு....

இன்னமும் நாங்கள் தனியார் பள்ளிகள் ஒதுக்கித் தள்ளுகிற ஏழை மாணவர்களுக்குத் தான் கற்பிக்கிறோம். அவர்களது குடும்ப சூழலையும், பொருளாதார சூழலையும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கே வரமாட்டேன், கூலி வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும்,செங்கல் சூளை வேலைக்கும் தான் செல்வேன் என அடம்பிடிக்கிற மாணவர்களை, பள்ளிகளுக்கு பெரும்பாலான நாட்கள் வருகை தராத மாணவர்களைத் தான் நாங்கள் முடிந்த அளவிற்கு பயிற்சி அளித்து அரசுத் தேர்வுக்கு அனுப்புகிறோம்.

குறைவான அளவே, அவர்களால் படிக்க முடிந்த அளவு எழுத முடிந்த அளவு கொடுத்து, அவர்களை எங்கள் செலவில் நிறைய நோட்டு,பேனா, ஃஸெராக்ஸ், கையேடுகள் மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் அளித்து ஊக்குவித்து கிடைக்கிற வகுப்பறைகளையும், மரத்தடிகளையும் பயன்படுத்தி படிக்க வைக்கிறோம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 75 சதவீத அளவிற்கு ஆசிரியர்கள் மாநில அளவிலான தகுதித்தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அரசுப் பள்ளிகள் என்றாலே ஆசிரியர்கள் தரமில்லை என ஒட்டுமொத்தமாக் கூறுவதை நிறுத்துங்கள். அந்தக் கூற்று இப்போது ஆர்வத்தோடும், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடும் பணியாற்றக் கூடிய பெரும்பாலான இளைய ஆசிரிய சமுதாயத்தின் மனதை வலிக்கச் செய்யும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறமையற்றவர்கள் எனில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவர்கள் உதவியை நாடி வருவது ஏன்? ட்யூஷன் எடுக்க மாட்டேன் என சொன்னாலும் இலவசமாக வீட்டிற்கு வந்து உதவியைப் பெறும் மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

சரி அதை விடுங்கள். எத்தனை தனியார் பள்ளிகள் அரசு ஆசிரியர்களை, அல்லது ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்களை தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அழைக்கிறார்கள் தெரியுமா?
ஒரு மணி நேரம் பயிற்சி அளித்தால் 3000 ரூபாய் வரை அளிப்பதாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களின் தனியார் பள்ளிகள் என்னை அணுகின (நான் பெரிய அப்பாடக்கர் என்பதை அறியாமல்). நான் ஒரு போதும் அதைச் செய்வது இல்லை. அன்போடு மனம் நோகாதவாறு தவிர்த்துவிடுவேன்.

பெருமைக்காகச் சொல்லவில்லை.

நான் மட்டுமல்ல.இன்னும் திறமையான நிறைய அரசு ஆசிரியர்கள் இந்தத் தவறை செய்வதில்லை. எனக்கு அரசு சம்பளம் தருகிறது என்பதை விட என் மாணவர்கள் எனக்கு சம்பளம் தருகிறார்கள் என்ற எண்ணமே இன்று பெரும்பாலான அரசு ஆசிரியர்களின் மனதில் வேறூன்றிவிட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இப்போது தகுதித் தேர்வு வைத்தாலும் வெல்லப் போவது அரசுப் பள்ளி ஆசிரியர்களே. படித்தலும், புதுப்பித்துக் கொள்வதும், "மாநில அளவிலான போட்டித் தேர்வில்" வெற்றி பெறுவதும் அவர்களுக்குப் புதிதல்ல.

திறமை தனியாரிடம் தான் இருக்கிறது எனக் கூவும் நண்பர்கள் அவர்களை போட்டித் தேர்வு எழுதச் சொல்லி அரசுப் பணிக்குச் செல்ல ஆலோசனை சொல்லுங்களேன்.

ஒரு மாற்றதிற்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை ஒரு வாரம் அரசுப் பள்ளிகளில் பணியாற்றச் சொல்லுங்களேன். நாங்கள் அவர்கள் பள்ளிகளுக்குச் சென்று 'சகல' வசதிகளோடு பணியாற்றி வருகிறோம். அதற்கான சம்பளத்தையும் கொடுத்து விடுகிறோம்.

ஏன் இவ்வளவு தைரியமாக சொல்கிறேன் என்றால், இன்றைக்கு சிறப்பு தகுதி உள்ள அத்தனை ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி விட்டு வந்தவர்கள் தான். ஆனால் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பாதியிலே விட்டுவிட்டு தனியார் பள்ளிகளில் பணியாற்றுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அரசுப் பள்ளி மாணவர்கள் அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். தனியார் பள்ளிகளைப் போல தண்டனை, தண்டம் கட்டுதல், பெற்றோரை அழைத்து வரச் சொல்லி மிரட்டுதல், சரியாகப் படிக்காவிட்டால் நீக்குதல் என்ற மனிதாபிமானமற்ற அராஜகங்களை இங்கே செயல்படுத்துவதில்லை.

சுருக்கமாகச் சொன்னால் அரசுப் பள்ளிகள், எந்திரங்களை உருவாக்குவதில்லை. அப்துல்கலாமைப் போல், மயில்சாமி அண்ணாதுரை அவர்களைப் போல் மாண்புமிக்க சமுதாயம் போற்றும் மனிதர்களை மட்டுமே உருவாக்குகிறது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி