திண்டுக்கல்:வங்கிகளில் கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கு, 'பான்கார்டு' அவசியம் என்பதால், அதை பெறுவதற்கான முயற்சியை உடனேதுவக்கினால், கடன் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கலாம். பிளஸ்2 தேர்வு முடிவிற்கு பின், எந்த கல்லுாரியில், எந்த பாடப்பிரிவில் சேர்க்கவேண்டுமென்பதிலேயே, பல பெற்றோர்களின் கவனம் இருந்து வருகிறது.இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும், அந்தந்த பல்கலை சார்பில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.குடும்பத்தின் முதல் பட்டதாரி என்றால், அதற்கான ஆவணங்களை இப்போதே வாங்கி வைத்திருக்கும்படி, பல்கலைகள் அறிவுறுத்தியுள்ளன.
அதேபோல், வங்கிகளில் கல்வி கடனுக்காக, விண்ணப்பிப்பவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில், மாணவர்கள் பெயரில் 'பான் கார்டு'அவசியம். தற்போதே விண்ணப்பித்தால் தான், ஒரு மாதத்திற்குள் இதை பெறமுடியும்.வங்கி அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா, எம்.ஜி.ஆர்., பல்கலைகள் நடத்தும் 'கவுன்சிலிங்'கில் பங்கு பெற்று, எந்த கல்லுாரியில் 'சீட்'பெற்றாலும், வங்கி கடன்மூலம் தான் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள், முன்னதாகவே அதற்கான ஆவணங்களை சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். வங்கி கடனுக்கு 'பான்கார்டு' அவசியம் என்பதால், அதை பெறுவதற்கான முயற்சியை தற்போதே பெற்றோர்கள் துவக்கினால், தேவையில்லாத காலதாமதத்தை தவிர்க்கலாம், என்றனர்.