புதுடெல்லி, மே 16- ரெயில்களின் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை முறையே 14.2 மற்றும் 6.5 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரெயில்வே அமைச்சகம் சமீபத்தில் முடிவு செய்தது.
இந்த புதிய கட்டண விகிதத்தை வரும் 20-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியானது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வேளையில் வெளியான இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை முதல் வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில், ரெயில் கட்டணத்தை உயர்த்தி வெளியிடப்பட்ட அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், இது தொடர்பாக, புதிதாக பதவி ஏற்கும் அரசு தீர்மானித்து, இறுதி முடிவு எடுக்க வழிவகை செய்யும் வகையில் புதிய மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு ரெயில் கட்டண உயர்வு விவகாரத்தை முன்வைப்பது எனவும் ரெயில்வே அமைச்சகம் தற்போது ஆலோசனை வழங்கியுள்ளது.
இதனையடுத்து, வரும் செவ்வாய்க்கிழமை முதல் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரெயிலின் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது