வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 17ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. ஏப்ரல் 15ம் தேதிஇரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்ததால், ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் 2,342 காலி பணியிடங்களுக்கு 9.95 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுக்கு சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்தோர் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா நேற்று வெளியிட்ட அறிக்கை:டி.என்.பி.எஸ்.சி. வருகிற 14ம் தேதி முற்பகல் வி.ஏ.ஓ. பதவிக்கான எழுத்து தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 9.95 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர் விவரம் டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. விஏஓ அலுவலர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்து கொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் செலுத்தி அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாரர் பணம் செலுத்தியதற்கான செலுத்து சீட்டின் நகலுடன் விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு 23ம் தேதிக்குள் (நாளைக்குள்) அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.விஏஓ தேர்வுக்கு பொது அறிவியலில் இருந்து 75 வினாக்களும், கிராம நிர்வாக நடைமுறைகள் 25 வினாக்களும், திறனறிவு தேர்வுக்கு 20 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்கு தகுதி பெற குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.