தேர்வில் 5 முறை தோல்வியடைந்தாலும் தன்னம்பிக்கையால் நீதிபதியாக உயர்ந்தேன்': சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்


பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் 5 முறை தோல்வியைத் தழுவிய பிறகும் தன்னம்பிக்கையுடன் பயின்றதால் நீதிபதி பொறுப்புக்கு உயர்ந்ததாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் நீதிபதி கர்ணன் வெளியிட்ட செய்தி:

தேர்வில் தோல்வியடைந்ததற்காக இறைவன் அளித்த வாழ்க்கையை மாணவர்கள் மாய்த்துக் கொள்ளக் கூடாது. நான் (சி.எஸ்.கர்ணன்) தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் கல்வி பயின்றேன்.


ஆறாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பி.யூ.சி படிப்பு, பி.எஸ்சி மற்றும் பி.எல் பயிலும்போது தேர்வுகளில் தோல்வியைத் தழுவினேன். ஏழை மாணவனான நான், பல ஏமாற்றங்களையும் குழப்பங்களையும் எதிர்கொண்டேன்.

இருப்பினும் எந்த துன்பங்களையும் கண்டு பயப்படாமல், நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருந்தேன். அதன் பின்னர் தொடர்ந்து படித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பொறுப்பை அடைந்துள்ளேன்.

எனவே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், பொறுமை, உறுதி மற்றும் சகிப்புத்தன்மையை தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும். மனித உயிர் விலை மதிக்க முடியாதது. ஆகவே அதனை நாம் பாதுகாக்க வேண்டும். உயிரை, தாமாகவே மாய்த்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.

மனிதனாகப் பிறந்த அனைவராலும் சாதிக்க முடியும் என்பது எனது பணிவான நம்பிக்கை. இவ்வாறு நீதிபதி சி.எஸ்.கர்ணன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி