முதல் முறையாக 500-க்கு 500 பெற்ற மூவர்!

முதல் முறையாக 500-க்கு 500 பெற்ற மூவர்!


பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல்முறையாக 3 மாணவர்கள் 500-க்கு 500 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.


மதுரை டிவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.துர்காதேவி, சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.ஹேமா வர்ஷிணி, கோவை பீளமேட்டில் உள்ள ஜிஆர்ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.வி. விஜயமூர்த்தி ஆகியோர் அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஜி.துர்காதேவி : சம்ஸ்கிருதத்தை முதல் மொழிப்பாடமாக எடுத்துப் படித்துள்ளார்.

""பத்தாம் வகுப்புத் தேர்வில் 495 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் 500-க்கு 500 மதிப்பெண் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஐ.ஏ.எஸ். பணி மீது சிறுவயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உள்ளது'' என ஜி.துர்காதேவி தெரிவித்தார்.

இவரது தந்தை பி.காந்திமதிநாதன் நூலகராகப் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் பாகம்பிரியாள் இல்லத்தரசியாக உள்ளார்.

ஜி.ஹேமா வர்ஷிணி: ""500 மதிப்பெண் பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. பள்ளியில் அளித்த சிறப்பு பயிற்சி, தேர்வுகள் என்னை வெற்றிக்கு இட்டுச் சென்றது. தாய்மொழி தெலுங்கு என்றாலும் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக பிரெஞ்சு மொழிப் பாடத்தை முதற்பாடமாக தேர்வு செய்து படித்தேன்.

எனக்கு கணிதம் தான் மிகவும் சிரமமான பாடம். பள்ளி தவிர கணிதத்திற்கு தனியாக டியூஷன் படித்தேன். வீட்டில் படிக்க ஆரம்பிக்கும்போது முதலில் கணிதப் பாடத்தைத்தான் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். தேர்வு எழுதிய பின்பும் கணிதப் பாடம்தான் அதிகம் பயமுறுத்தியது. எதிர்காலத்தில் மருத்துவம் படித்து ஏழை, எளியவர்களுக்கு உதவ வேண்டும்'' என்றார் அவர்.

இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். தாயார் விஜயலட்சுமி இல்லத்தரசியாக உள்ளார்.

எஸ்.வி. விஜயமூர்த்தி: இவரும் பிரெஞ்சு பாடத்தை முதல் மொழிப்பாடமாக எடுத்து படித்துள்ளார்.

500-க்கு 500 தொடர்பாக அவர் கூறியது:

பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பெறுவேன். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எம்.பி.பி.எஸ். படித்து இதய சிகிச்சை நிபுணராக விரும்புகிறேன், என்றார் அவர்.

இவரது தந்தை சக்திவேல் தனியாக தொழில்செய்து வருகிறார். இவரது தாய் சுமதி பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி