மாணவி அகல்யா மாணவி வித்யாலட்சுமி மாணவி ஷோபியா
திருச்சி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்து சாதனை படைத்துள்ளனர். டாக்டருக்கு படிக்க விரும்புவதாக மாணவிகள் தெரிவித்தனர்.
மாணவி அகல்யா
பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் துறையூர் சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி மாணவி எம்.அகல்யா 1200–க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி அகல்யா பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:–
தமிழ்–197, ஆங்கிலம்– 194, இயற்பியல்–200, வேதியியல்–199, உயிரியல்–199, கணிதம்–200.
சாதனை படைத்த மாணவி அகல்யா நிருபர்களிடம் கூறுகையில், எனது தந்தை பெயர் முருகேசன். தாய் கவிதா, தம்பி பரத் 10–ம் வகுப்பு படித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், இயக்குனர்கள், முதல்வர் ஆகியோரின் ஒத்துழைப்புடன், என்னுடைய தீவிர முயற்சியால் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளேன். நான் ஒவ்வொரு பாடத்திலும் முழுமையாக கவனத்தை செலுத்தி படித்தேன். பள்ளி நேரத்தை தவிர மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களை படித்து வந்தேன். நான் டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்றார்.
மாணவி வித்யாலட்சுமி
சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி மாணவி ஜி.கே.வித்யாலட்சுமி 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது திருச்சி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் ஆகும். வித்யாலட்சுமி பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:–
தமிழ்–193, ஆங்கிலம்–195, கணக்கு–200, இயற்பியல்–200, வேதியியல்–200, உயிரியல்–200. வித்யாலட்சுமியின் தந்தை கதிர்வேல் திருச்சி பெல் நிறுவனத்தில் துணை பொது மேலாளராக உள்ளார். தாயார் கமலா, இல்லத்தரசி ஆவார். வித்யாலட்சுமிக்கு விக்னேஷ்ராஜா என்ற அண்ணன் உள்ளார்.
சாதனை படைத்த மாணவி வித்யாலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், நான் பத்தாம் வகுப்பில் திருச்சி மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றேன். பிளஸ்–2–வில் கடுமையாக உழைத்து படித்தேன். அதன் பயனாக மாவட்ட அளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. நான் அதிக மதிப்பெண் பெறுவதற்கு எனது பெற்றோர், பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உதவி செய்தனர். டாக்டராவதே எனது லட்சியம். தினத்தந்தி சார்பில் வெளியிடப்படும் வினா–விடை புத்தகம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பத்தாம் வகுப்பிலும் தினத்தந்தி வினா–விடை புத்தகம் படித்தேன். நான் எப்போதாவதுதான் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பேன். பிளஸ்–2 வகுப்பு தொடங்கியதில் இருந்து ஒரு வருடம் நான் டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை என்றார்.
மாணவி ஷோபியா
துறையூர் சவுடாம்பிகா பள்ளி மாணவி ஜி.ஷோபியா 1187 மதிப்பெண்கள் பெற்று திருச்சி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக பின்வருமாறு:–
தமிழ்–194, ஆங்கிலம்–195, இயற்பியல்–199, வேதியியல்–200, கணினி அறிவியல்–199, கணிதம்–200
மூன்றாம் இடம் பெற்ற மாணவி ஷோபியா நிருபர்களிடம் கூறுகையில், எனது தந்தை கணேசன் வியாபாரம் செய்து வருகிறார். தாயார் பெயர் செல்வி. எனது அக்கா மோனிஷா என்ஜினீயரிங் படித்து வருகிறார். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவரும் என்னுடைய சாதனைக்கு உறுதுணையாக இருந்தார்கள். நான் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை படித்து வந்தேன். வகுப்பு அறையில் ஆசிரியர்கள் நடத்திய அனைத்து பாடங்களை படித்து பார்த்து எழுதி வந்தேன். நான் பேராசிரியராக பணியாற்றி நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.