3ம் இடத்திற்கு போனது விருதுநகர் : 28 ஆண்டு சாதனையை முறியடித்தது ஈரோடு.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் கடந்த 28 ஆண்டாக, மாநில முதலிடத்தில் இருந்த விருதுநகர், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, 1985ல், விருதுநகர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது முதல், ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர், மாநில முதலிடம் பிடித்து தொடர்சாதனை படைத்தது. "இந்த ஆண்டும் முதலிடம் பிடிக்கும்' என கல்வித்துத்துறை அதிகாரிகள் எதிர்பார்த்த நிலையில், 96.12 சதவீதம் பெற்று, ஈரோடு, நாமக்கல்லை தொடர்ந்து, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இதனால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல, 10ம்வகுப்பு தேர்ச்சியில் 26 ஆண்டாக, மாநில முதல்இடத்தில் இருந்த இம்மாவட்டம், 2011-12ல் மூன்றாம் இடத்திற்கும்; 2012--13ல் ஐந்தாம் இடத்திற்கும் தள்ளப்பட்டது.இங்கு, பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில், வகுப்பறை கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை; போதுமான ஆசிரியர்களும் கிடையாது. "கண்காணிப்பு இல்லாததால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக வருவது இல்லை' என பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற பள்ளிகளுக்கு சென்றுவர,போதிய பஸ் வசதி கிடையாது. கல்வித்துறை அதிகாரிகளும், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை காட்டுவது இல்லை. இப்பிரச்னைகளை எல்லாம் தாண்டித்தான், மாணவர்கள் சாதிக்க வேண்டி உள்ளது. இது போன்ற மனக்குமுறல்கள் எதிரொலிக்கின்றன.

இதுகுறித்து கல்வியாளர்கள் சொல்வது என்ன?ஷேக் மகபூப் (முதுகலை ஆசிரியர், விருதுநகர்): ஆங்கில மோகம் அதிகரிப்பால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்புகின்றனர். இதனால், படிப்பில் நடுத்தர மற்றும் அதற்கு கீழ் உள்ள மாணவர்களே, அரசுப்பள்ளிகளில் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு, கண்டிப்புடன் கல்வி கற்று தர முடியவில்லை; மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்துவது கிடையாது. இதேபோல் தமிழக அரசு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு புத்தகத்தை, மூன்றாம் பருவத்தில் வெளியிட்டது. இதை பள்ளி தொடக்கத்திலே கொடுத்திருந்தால், மாணவர்கள் தேர்ச்சி அதிகரித்து இருக்கும். கடந்த ஆண்டுகளை போல் முதலிடத்தை பெற்றிருக்கும்.

கே. கோகிலம் (தலைமை ஆசிரியை, எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை): இம்மாவட்டம் 3ம் இடத்தை பெற்றுள்ளது. ஆனால், தேர்ச்சி விகிதமும், கல்வித் தரமும் குறையவில்லை. இந்த மாவட்டத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவர்கள், வெளி மாவட்டத்திற்கு சென்று படிக்கின்றனர். இங்கு கற்ற கல்விதான், அங்கு அவர்களை அதிக மதிப்பெண் பெற உதவுகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ஒத்துழைத்தால் மீண்டும் முதல் இடத்திற்கு வந்து விடும்.

ஏ.பாஸ்கரன் (முதல்வர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி): மாவட்டத்தில், கிராமப்புற மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். ஆசிரியர்களின் வகுப்பறை ஈடுபாட்டை, இன்னும் அதிகரிக்க வேண்டும். இங்குதான் திறமையான மாணவர்கள்அதிகளவில் உருவாகின்றனர். இங்கு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களை தேடிப்பிடிக்கும், வௌ?மாவட்ட கல்வி நிறுவனங்கள், சலுகைகள் வழங்கிஅழைத்து சென்று விடுகின்றனர். பல மாவட்டங்களில் தரம் பெற்ற மாணவர்கள் பலர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். மற்ற மாவட்டங்களில் மத்திய அரசின் கல்வி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் அதிகம் நடக்கிறது. இம் மாவட்டத்தில் குறைவு

என்.ஏ. பாலசுப்பிரமணியன் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியம்): தரம் உயர்த்தப்பட்ட கிராமப்புற மேல்நிலைப்பள்ளிகளில், சுமாராக படிக்கும் மாணவர்களும், கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளை படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்; இப்பள்ளிகளில், போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளிலும், பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டதால், கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு ஒரு சதவீதம் அதிகம் பெற்றும், மூன்றாமிடம் பிடித்தது வருத்தம் அளிக்கிறது. காலிப் பணியிடங்களை நிரப்பி, கிராமப் பள்ளிகளில் கலை பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டால், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.

செண்பகம் (ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர், ராஜபாளையம்): மாவட்டம் பின்தங்குவதற்கு முதற்காரணம், சட்ட திட்டங்கள் மாணவர்களுக்கு சாதகமாக இருப்பது தான். மாணவர்களுக்கு பயிற்சி என்பது அவசியம். பலமுறை எழுதிப் பார்த்தால் தான், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். தற்போது பயிற்சி கொடுக்க முடியாத, மாணவர்களை கண்டிக்க கூட முடியாத நிலை உள்ளது. அதேவேளை, பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது.மாணவர்களின் சேர்க்கையும் அதிகம் உள்ளது. கண்டிப்பு இல்லாமல், மாணவர்களின் மதிப்பெண் குறைகிறது. பெற்றோர் ஒத்துழைத்தால் இந்த நிலை மாறும்.

முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார்: கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 95.87. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தாலும், மாநில முதலிடத்தை தக்கவைக்க முடியாமல் போனது ஏமாற்றம் தருகிறது. ஆசிரியர், மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தி கையேடு வழங்கப்பட்டது; ஆனாலும், பயன் கிடைக்கவில்லை. மாணவர்கள் சிலர் வகுப்புக்கு வராமல், கூலி வேலைக்கு செல்கின்றனர். இதுவும் தேர்ச்சி குறைய ஒரு காரணம். பெற்றோரை அழைத்துப்பேசி குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்ய உள்ளோம். இதன்மூலம், மீண்டும் முதலிடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு கூறினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி