தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், மாணவர்களிடையே என்ன மேல்படிப்பில் சேரலாம் என்ற குழப்பம், நிலவி வருகிறது.
கடந்த 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வழக்கம் போல இந்த ஆண்டும் படபடப்புடன் காத்திருந்த மாணவர்கள், தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். மதிப்பெண்கள் தெரிந்தவுடன் அடுத்த கட்டமாக கல்லூரியில் சேர்வது குறித்த 'டென்ஷன்' மாணவர்களிடையே ஆரம்பித்துள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் இது குறித்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். காரணம், என்ன வகையான படிப்புகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பது; எதை படித்தால் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்ற குழப்பம் தான்.
பெற்றோர் சிலர் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு, இன்ஜினியரிங் படிப்புக்கு சீட் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவர். காரணம் 'படித்து முடிக்கும் முன்னரே வளாக நேர்காணலில் வேலை கிடைத்து விடும்' என்ற நம்பிக்கை தான்.ஆனால் தற்போதைய சூழல் அதற்கு உகந்ததாக இல்லை. எங்கு திரும்பினாலும் இன்ஜினியரிங் கல்லூரிகள்; யாரைக்கேட்டாலும் இன்ஜினியரிங் படிப்பு என்ற சூழல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கு மிக அதிகமான இவ்வகை பட்டதாரிகள் உருவாகின்றனர். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல இன்ஜினியர்களுக்கு அதிகளவில் வேலை கொடுத்து வந்தவை, மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான். தற்போதைய மாறி வரும் உலகின் பொருளாதார சூழலால், அந்நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றன. அதனால் புதுப்புது ஆட்களை வேலைக்கு எடுப்பதும், அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதும் இப்போது குறைந்துள்ளது. இத்தகைய சூழலில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மேற்படிப்பு குறித்த குழப்பம் ஏற்படுவது இயற்கை தான். இன்ஜினியரிங் சேர்வதில் உள்ள ஆர்வம் பலரிடத்தில் தொடர்ந்தாலும், சிலர் மாற்றுப்படிப்புகளை தேடிச்சேர்வது அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், பயோ-டெக்னாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி, விவசாயம் சம்பந்தமான அறிவியல் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறப்படுவதால், தரமான கல்வி நிறுவனங்களில் அப்படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் படிக்காத மாணவர்கள், பி.ஏ., ஆங்கில இலக்கியம், பி.காம்., உள்ளிட்ட படிப்புகளிலும் சேர விரும்புகின்றனர். காரணம் இவற்றுக்கு செலவு குறைவு என்றாலும், ஆசிரியர் பணி, அரசாங்கப்பணி மற்றும் சி.ஏ., எனப்படும் கணக்கு தணிக்கையாளருக்கான படிப்பு ஆகியவற்றுக்கான வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.ஆக இன்ஜினியரிங் படிப்புக்கான மோகம் குறையாவிட்டாலும், மாற்றுப்படிப்புக்கான தேடல் தொடங்கியுள்ளது. அதற்கான அறிகுறிதான் தற்போது மாணவர்கள், பெற்றோர்களிடையே மேற்படிப்பு குறித்து ஏற்பட்டுள்ள குழப்பம்