பிளஸ்–2 பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 74.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும். ஆனாலும் மாநில அளவில் கடைசி இடத்தையே பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி 25–ந்தேதி முடிவடைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு கல்வி மாவட்டங்களில் தேர்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 25,367 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 18,784 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 74.4 சதவீத தேர்ச்சி ஆகும்.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 69.91 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதைவிட இந்த ஆண்டு 5 சதவீதம் மாணவ, மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆனாலும் வழக்கம் போல இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தையே பிடித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்னையா கூறியதாவது:–
இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டை விட 4 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இருந்தாலும் மாநில அளவில் கடைசி இடம் தான் கிடைத்துள்ளது.
வருகிற கல்வி ஆண்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் மாவட்டம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.