
இது குறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழறிஞர் கால்டுவெல் 1814-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி, அயர்லாந்தில் பிறந்து 1891-ஆம் ஆண்டு தமது 77-ஆவது வயதில் தமிழகத்தில் கொடைக்கானல் மலையில் உயிர் துறந்தார். அவரது உடல், திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் அவர் எழுப்பிய திருச்சபை ஆலயத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்: தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல், ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று 23-ஆவது வயதில் சமயப் பணிபுரிவதற்காகத் தமிழகம் வந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் இடையன்குடியை இருப்பிடமாகக் கொண்டு தமிழ்ப் பணி ஆற்றி வந்த அவர், இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலைநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் போற்றத்தக்கப் புலமை பெற்றிருந்தார்.
அதன் பயனாக, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் ஒப்பிலா உயர் தமிழ் மொழியியல் ஆய்வு நூலை எழுதினார். இந்த நூலே, தமிழ் மொழியின் மொழியியல் ஆய்வுக்கு முன்னோடியாக அமைகிறது. திராவிட மொழிகள் ஒரு தனியினம், அவற்றுக்குக் தாய், தமிழே என விளக்கி உலகுக்கு உணர்த்தி மொழியியல் ஆராய்ச்சியில் நமக்கு வழிகாட்டிய விடிவெள்ளி ஆவார்.
திராவிட மொழிகளுக்கு புத்துயிர் அளித்தவர். அவரது ஒப்பிலக்கண ஆய்வு பணியைப் பாராட்டி, சென்னை பல்கலைக்கழகமும், ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியும் அவருக்கு இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் என்ற பட்டங்களையும் வழங்கிப் பெருமைப்படுத்தின.
200-ஆவது ஆண்டு நிறைவு நாள்: தமிழ்மொழி நூல் ஆய்வுக்கு முன்னோடியாக இருந்த தமிழறிஞர் கால்டுவெலைப் பெருமைப்படுத்தும் வகையிலும் அவரது 200-ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையிலும் அவரின் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவரது பிறந்த தினம், வரும் புதன்கிழமை (மே 7) கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு, திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லத்தில் அவரின் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலையணிவித்து பெருமைப்படுத்தப்படும். மேலும், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.
நிகழ்ச்சிகளில் அரசு சார்பில் அமைச்சர்கள், பொது மக்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் அவரது பிறந்த தினத்தன்று சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து பெருமைப்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.