சுதந்திரப் போராட்டக் காலத்தில் லால்-பால்-பால்(Lal-Bal-Pal) என்று திரிசூலமாகக் கருதப்பட்டவர்களில் ஒருவர் பிபின் சந்திரபால். காந்தியின் மிதவாதக் கொள்கைகளை எதிர்த்த சந்திரபால், லண்டனில் இருந்த இந்தியா ஹவுஸ்-ல், வி.டி.சவர்க்கர், மதன்லால் திங்ரா போன்றோருடன் இணைந்து பணியாற்றியதுடன், சுயராஜ்யா பத்திரிக்கையையும் வெளியிட்டவர்.
1905-ம் ஆண்டு வங்கதேசம் பிரிக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, அந்நிய துணி எரிப்பு, சுதேசி இயக்கம் போன்றவற்றில் தீவிரமாகச் செயல்பட்டவர். எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகம் கொண்டவரும், புரட்சிக் கருத்துக்களின் தந்தை என அழைக்கப்பட்டவருமான சந்திர பால், 1932-ம் ஆண்டு இதே நாளில்தான், உயிரிழந்தார்.
பாலு மகேந்திரா பிறந்த தினம்
கேமராக் கவிஞன் பாலுமகேந்திரா, இலங்கையில் உள்ள மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் 1939-ம் ஆண்டு இதே நாள் பிறந்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற பாலு மகேந்திரா 1971-இல் தங்கப்பதக்கம் வென்றார்.
தன்னுடைய முதல் திரைப்படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதைப் பெற்று திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தார். இயற்கை ஒளியை அதிகளவில் பயன்படுத்தி ஒளிப்பதிவில் புதிய பாணியை உருவாக்கிய பாலுமகேந்திரா, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, வீடு, வண்ண வண்ணப் பூக்கள் போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தவர்.
வாஸ்கோ ட காமா இந்தியா வந்தடைந்த தினம்
கடல் மார்க்கமாக இந்தியா வருவதற்காக போர்ச்சுக்கல்லில் இருந்து புறப்பட்ட வாஸ்கோ ட காமா, 1498-ம் ஆண்டு இதே நாள் கோழிக்கோட்டை வந்தடைந்தார். அரபு நாடுகள் வழியாக இந்தியா வருவதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் மாற்று வழி தேடி ஸ்பானியர்களும், போர்ச்சுக்கீசியர்களும் பல்வேறு கடல் பயணங்களை மேற்கொண்டனர்.
அஹமத் இபின் மஸ்ஜித் என்ற புகழ்பெற்ற அரபு மாலுமியின் துணையுடன் கோழிக்கோட்டை வந்தடைந்த வாஸ்கோ ட காமா, இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
மிளகு, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்று வியாபாரம் செய்வதற்காக புறப்பட்ட வாஸ்கோ ட காமாவின் பயணம் இதே நாளில்தான் வெற்றியடைந்தது.