20–ந் தேதி முதல் அமல்: ரெயில் கட்டணம் 14.2 சதவீதம் உயர்வு: ரெயில்வே அமைச்சகம் ‘திடீர்’ அறிவிப்பு

ரெயில்களில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயருகிறது. திடீர் அறிவிப்பு ரெயில்களில் அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை ரெயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, இந்த கட்டண உயர்வு அறிவிப்புதிடீரென வெளியிடப்பட்டது. இந்த கட்டண உயர்வு, வருகிற 20–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பயணிகள் கட்டணத்தைப் பொறுத்தவரை, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியாக 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், எரிபொருள் விலைக்கேற்ற கட்டணமாக, கூடுதலாக 4.2 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. எனவே, மொத்த கட்டண உயர்வு 14.2 சதவீதம் ஆகும். கட்டண வசூலிப்புக்கான குறைந்தபட்ச தூரம்வரை கட்டண உயர்வு கிடையாது.இருப்பினும், முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. சூப்பர்பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் வரி, சேவை வரி ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் இல்லை.

சீசன் டிக்கெட்
புறநகர் மற்றும் புறநகர் அல்லாத ரெயில்களுக்கான இரண்டாம் வகுப்பு மாதாந்திர சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம், இனிமேல், மாதத்துக்கு 15 நடை பயணம் என்ற அடிப்படையில் இல்லாமல், 25 நடை பயணம் என்ற அடிப்படையில் வசூலிக்கப்படும். காலாண்டுக்கான சீசன் டிக்கெட், அரை ஆண்டுக்கான சீசன் டிக்கெட், முழு ஆண்டுக்கான சீசன் டிக்கெட் ஆகியவற்றுக்கும் இதே முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.முதல் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணம், தற்போது இருப்பது போல, இரண்டாம் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணத்தை விட 4 மடங்காக இருக்கும்.

சரக்கு கட்டணம்
ரெயில்களில் சரக்கு கட்டணம் ஒரே மாதிரியாக 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், கூடுதலாக, எரிபொருள் விலைக்கேற்ற கட்டணமாக 1.4 சதவீதம் வசூலிக்கப்படும். 100 கி.மீ. வரையிலான தூரத்துக்கு அனுப்பப்படும் சரக்குக்கான கட்டண சலுகை வாபஸ் பெறப்படுகிறது. குறைந்த கட்டண வகுப்புகளின் எண்ணிக்கை 4–ல் இருந்து 3 ஆக குறைக்கப்படுகிறது. சில சரக்குகளுக்கான சலுகைகளும் வாபஸ் பெறப்படுகின்றன.

20–ந் தேதி அமல்
பயணிகள் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும் வருகிற 20–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

20–ந் தேதியோ அல்லது அதற்கு பிறகோ பயணம் செய்வதற்காக, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். அத்தகைய பயணிகள் கட்டண உயர்வுத் தொகையை ரெயில் பயணத்தின்போது, டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும். அல்லது, பயணம் செய்வதற்கு முன்பு, முன்பதிவு மையங்களில் செலுத்த வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி