பிளஸ் 2 ரிசல்டை எதிர்பார்த்து 8 லட்சம் மாணவர்கள் ஆவல்: பள்ளிகள், இன்டர்நெட்டில் இன்று காலை வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும், பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவ, மாணவியர், ஆவலுடன் உள்ளனர்.

மார்ச், 3ம் தேதி முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 2,242 மையங்களில் நடந்த தேர்வுகளில், 8.26 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில், 3.8 லட்சம் பேர், மாணவர்கள்; 4.45 லட்சம் பேர், மாணவியர்.பி.இ., சேர்க்கை மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம், மாநிலம் முழுவதும் பரபரப்பாக விற்பனை ஆகி வரும் நிலையில், இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவர்களும், ஆவலுடன் உள்ளனர்.மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு பட்டியல், காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த பட்டியல், நேற்றே, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன.

தேர்வுத் துறையின், 'www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in' ஆகிய, நான்கு இணையதளங்களில், சரியாக, காலை, 10:00 மணிக்கு, தேர்வு முடிவை வெளியிட, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், ஏற்பாடு செய்துள்ளார்.தேர்வு முடிவை, மாணவர்கள், எவ்வித தடங்கலும் இல்லாமல் அறிந்து கொள்வதற்கு வசதியாக, 'இன்று, மாநிலத்தின் எந்த பகுதியிலும், மின் தடை செய்யக்கூடாது' என, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.பெரும்பாலான மாணவர்கள், இணையதளம்வழியாக, தேர்வு முடிவை பார்ப்பதால், மின் வாரியம், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மன உளைச்சலா...
தேர்வு முடிவால், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், '104' மருத்துவ உதவி சேவைத் திட்டத்தை தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனைகள் பெற, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ, மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி, தவறான முடிவு எடுத்து விடுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான வழிகாட்டல் இல்லாததுமே இதற்கு காரணம்.சேவைத் திட்ட செயல் இயக்குனர், பிரபுதாஸ் கூறியதாவது:மதிப்பெண் குறைவால், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. பெற்றோர், அத்தகைய மாணவர்களை திட்டாமல் தேற்ற வேண்டும். 'அதிக மதிப்பெண் பெற, இன்னும் வாய்ப்பு கிடைக்கும்' என, எடுத்துச் சொல்ல வேண்டும்.முடியாவிட்டால், '104'க்கு அழையுங்கள். வாழ்க்கையில் ஜெயிக்க உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்தும், மாணவர்களுக்கு தேவையான, 'கவுன்சிலிங்' தரப்படும். மன நல ஆலோசகர் குழு, 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


உடனடிதேர்வு எப்போது?
*பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், தாங்கள் விரும்பிய பாடங்களின்விடைத்தாள்களின் நகல் பெறவும், மறுகூட்டல் கோரியும், இன்று முதல், 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.*இந்தாண்டு தனித் தேர்வு எழுதியவர்கள், அவரவர் தேர்வு எழுதிய மையங்களில், இன்று, மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.*பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு, ஜூன் இறுதியில், உடனடித் தேர்வு நடத்தப்படும். உடனடித் தேர்வை எழுத விரும்பும் பள்ளி மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வு மாணவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும், வரும், 12ம் தேதி முதல், 16ம் தேதி வரை, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி