லஞ்ச வழக்கில் சிக்கினால் முக்கியத்துவம் இல்லாத பதவி: ஐகோர்ட் உத்தரவு

லஞ்ச வழக்கில், "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கி, வீணாக வீட்டில் ஓய்வெடுக்க அனுமதிப்பதற்கு பதில், வெகுதூரத்திற்கு இடமாறுதல் செய்து, முக்கியத்துவம் அல்லாத பணி வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

உள்நோக்கம் உள்ளது : திருச்சி, லால்குடி டி.எஸ்.பி., செல்வமணி, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரை, "சஸ்பெண்ட்' செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி அவர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: காவல் துறை நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக முதலில், "சஸ்பெண்ட்' செய்தனர். பின், பொதுநலன் கருதி அவ்வாறு செய்ததாக, உத்தரவிட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. லஞ்ச வழக்கில், இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட எஸ்.ஐ., சந்திரமோகனை, நான் ஐகோர்ட்டில் இவ்வழக்கு தாக்கல் செய்த பின், சஸ்பெண்ட் செய்தனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.

75 சதவீத சம்பளம் உண்டு : நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு உடனடியாக, சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ., தாமதமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு, அரசுத் தரப்பில் சரியான காரணம் கூறவில்லை. ஒரே குற்றத்தில் ஈடுபட்ட இருவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையில் வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்யாவிடில், தன் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என, மனுதாரர் கோர முடியாது. ஒரு ஊழியர் ஆறு மாதங்களுக்கு மேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தால், அவருக்கு சம்பளத்தில், 75 சதவீதம் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கி, வீணாக வீட்டில் ஓய்வெடுக்க அனுமதிப்பதற்கு பதிலாக, வெகுதூரத்திற்கு இடமாறுதல் செய்ய வேண்டும். அங்கு, முக்கியத்துவம் இல்லாத சாதாரண பணி வழங்கி, வேலை வாங்க வேண்டும். இந்நடைமுறையை, மனுதாரர் மீதான வழக்கு, கீழ் கோர்ட்டில் முடிவுக்கு வரும் வரை பின்பற்ற வேண்டும். சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி