பி.எப்., பணப்பட்டுவாடா மின்னணு மயமாகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.ஓ.,) பணப் பட்டுவாடாசேவை முழுவதும், வரும் செப்டம்பர் மாதம் முதல், மின்னணு மயமாகிறது என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தற்போது, பி.எப்., பணப் பட்டுவாடா சார்ந்த பணிகளில், 93 சதவீதம், ஆன்லைன், அதாவது மின்னணு முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் பயனாக, காசோலை அல்லது வரைவோலை பயன்பாடின்றி,சந்தாதாரர்களின் வங்கி கணக்கில், பி.எப்., தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சென்ற நிதியாண்டில், ஆன்லைன் மூலம், பி.எப்., தொகை பெறுவது, வேறு நிறுவனங்களுக்கு கணக்கை மாற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக, 1.21 கோடி விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 13 சதவீதம் அதிகமாகும்.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் பி.எப்., பணப் பட்டுவாடா சேவை தொடர்பான, 100 சதவீத பணிகள், வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிவடைய உள்ளன. இதையடுத்து, செப்டம்பர் முதல், அனைத்து சந்தாதாரர்களும், ஆன்லைன் வாயிலாகவே பி.எப்., தொகையை பெறலாம். இ.பி.எப்.ஓ., மாதந்தோறும், 44 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இது, தொடர்பான அனைத்து தகவல்களும், மின்னணு தொழில்நுட்பத்திற்கு மாற்றும் பணி, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நிறைவடையும்.

தற்போதைய நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்துள்ள நிறுவனங்கள் மட்டுமே, பி.எப்., சந்தாவை, மின்னணு முறையில் செலுத்த முடியும். வரும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, இதர வங்கிகளில் கணக்கு வைத்துள்ள நிறுவனங்களும், ஆன்லைன் மூலமாகவே, பி.எப்., சந்தாவை செலுத்தலாம். நடப்பாண்டு அக்டோபருக்குள், நாடு முழுவதும் உள்ள சந்தாதாரர்கள் அனைவருக்கும், பிரத்யேக நிரந்தர கணக்கு எண் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி