மினிமம் பேலன்ஸ் குறைந்தால் அபராதம் கூடாது: வங்கிகளுக்கு புது உத்தரவு


ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்


சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை இன்று வெளியிட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

"சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சூழ்நிலையையும், அவர்களது கஷ்டத்தையும் புரிந்துகொள்ளாமல் வங்கிகள் தங்களுக்கு சாதகமாக அபராதம் விதிக்கக் கூடாது.

வாடிக்கையாளர்கள் கணக்கில் வங்கிகள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகையை எட்டிய பிறகு, வங்கிச் சேவையைத் தொடர அனுமதிக்கலாம். இதேபோல பரிவர்த்தனை நடக்காத வங்கிக் கணக்குகள் மீதும் இதுபோன்ற அபராதம் விதிக்கக் கூடாது" என்றார் ரகுராம் ராஜன்.

சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்தாலும் எஸ்பிஐ அபராதம் ஏதும் விதிப்பதில்லை. அதேவேளையில் ஐஓபி, கனரா வங்கி உள்ளிட்ட பிற பொதுத்துறை வங்கிகள் ரூ.20 அபராதம் விதிக்கின்றன.

ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,000 வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.750 அபராதம் விதிக்கின்றன. இவ்விரு வங்கிகளின் கிராமப்புற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.5,000 தொகையை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி