வெற்றிக்குப் பின்னே மறைந்திருக்கும் ரகசியங்கள்

வெற்றி மீது நமக்கு மிகப் பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறோம். போட்டி நிறைந்த உலகில் இதைத் தவிர்க்க முடியாதுதான். வெற்றி என்பதை எப்படிப் பார்க்கிறோம் என்பது வெற்றியைவிட முக்கியமான விஷயம்.

தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களையே வெற்றியாளர்களாக நம்மில் பலர் நினைக்கிறோம். வெற்றிபெற்ற அவர்கள் மகிழ்ச்சியானவர்களாக இருப்பார்கள் என நாம் நம்புகிறோம். ஆனால் வெற்றி அடைந்த மாணவர்களில் சிலர் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருக்கக்கூடும். அவர்களை நெருங்கிப் பார்க்கும்போது இதை நாம் உணர முடியும். அந்த மாணவர்கள் ஆசிரியர்கள் என்ன சொன்னார்களோ அதை மட்டுமே அப்படியே பின்பற்றியிருப்பார்கள். அதைத் தாண்டி அவர்களாக எதுவும் செய்திருக்க மாட்டார்கள். இந்த நினைப்பே அவர்களுக்கு மனக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

வெற்றிபெற்ற மாணவர்கள் எப்படி இருப்பார்கள்? ஒழுங்காகப் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வார்கள். பல மணி நேரங்களை வகுப்பறையிலேயே செலவிடுவார்கள். ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பார்கள். நண்பர்களிடையே தனித் திறமை உடையோராய்க் காட்சி அளிப்பார்கள். இப்படித்தான் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் இது மட்டுமா வெற்றி? சிறிது யோசித்துப் பார்த்தால் இல்லை என்பது புலப்படும். ஒரு மாணவர் கல்வி தவிர்த்து விளையாட்டு, கலை போன்றவற்றில் சமூக ரீதியான அங்கீகாரம் பெறும்போதே வெற்றிபெற்றவர் என்னும் நிலையை அடைய முடிகிறது.
கல்லூரிகளில் வெற்றிகரமாக விளங்கி அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எல்லோரும் வெளியுலகில் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்களா? அப்படி இருக்கவில்லை எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவரையிலும் ஏதோவொரு அட்டவணைக்குப்பட்டு வாழ்ந்துவிட்டுத் திடீரென வெளியுலகிற்கு வரும்போது சுயமாக முடிவெடுக்க முடியாமல் பலர் தடுமாறிவிடுகின்றனர்.
பிரச்சினைகளை அறிவைப் பயன்படுத்தி எப்படிக் களையலாம் என்பது பற்றி அவர்களுக்கு சொல்லித் தரலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. இதுவும் மீண்டும் ஒரு வகுப்பறைப் பாடமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. மேலும் வகுப்பறைகளுக்கு வெளியே கிடைக்கும் அனுகூலங்களை விளக்க முடியாமலும் போய்விடலாம். அதனால் அன்றாட வாழ்க்கையில் அறிவை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை விளக்கினால் அது சரியான வழிமுறையாக இருக்கும்.
வெற்றிபெற அவசியமான ஒன்று இலக்கைத் திட்டமிடல் என்பதை மறுக்கவே முடியாது. இலக்கை அடையும் பயணத்தை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும். தங்கள் திறன் முழுவதையும் பயன்படுத்தி தியானம்போல் ஒரு செயலை நினைத்து நிறைவேற்றிய பின்னர் அடுத்த செயலுக்குப் போக வேண்டும். ஆனால் பல மாணவர்கள் இதற்குப் பழக்கப்படாதவர்கள். தேர்வுகளை மனத்தில் வைத்தே பாடங்களைப் படித்துப் பழக்கப்பட்டவர்கள். அதனால் தங்களுக்கு என்ன தெரியும் என்பதே அவர்களுக்குத் தெரியாது. இதனால் அவர்களுக்குத் தங்கள் மீதே நம்பிக்கை ஏற்படுவதில்லை.
ஆக மாணவர்கள் உண்மை யான வெற்றியாளர்களாக மாற இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வகுப்பறைக்குள்ளும் வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்கள் நிஜமான வெற்றியை அடைய முடியும்.
அறிவைப் பூரணமாகப் பயன்படுத்துதல்
அறிவை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம். இதன் மூலம் அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கவும், வேலையைத் திட்டமிடவும், இலக்குகளை நிர்ணயிக்கவும், இலக்கின் நோக்கங்களை அறியவும் முடியும். தகவல் தொடர்புத் திறமையை வளர்த்துக்கொள்ளவும். கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளவும் இயலும்.
தனித் திறமைகள்
வாசிப்பு, எழுதுதல் போன்றவற்றை அறிந்துவைத்திருக்க வேண்டும். எந்தத் துறைக்குச் சென்றாலும் எந்த மொழி அறிந்திருந்தாலும் வாசிப்பும் எழுதும் திறமையும் கைகொடுக்கும். வாசித்த விஷயங்களை நடைமுறை வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பகுத்தறிதவதும் அவசியம்.
திட்டமிடல்
குறுகிய கால, நீண்ட கால இலக்குகளைச் சரியாகத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். இது வெறும் வேலை தொடர்பான இலக்குகள் மட்டுமல்ல. வாழ்க்கை தொடர்பான விஷயங்களிலும் இத்தகைய திட்டமிடல்கள் மிகவும் அவசியமானவையாக இருக்கும். குறிப்பிட்ட இலக்கை, ஆறு மாதத்தில் எட்ட வேண்டுமா, எட்ட ஆண்டுக் கணக்கில் நாட்களை ஒதுக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கத் திட்டமிடல்கள் உதவும்.
படைப்புத்திறன்
ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில் படைப்புத்திறன் மிகவும் உதவிகரமாக அமையும். நிதானமாகப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து யோசிக்கும்போது படைப்புத்திறன் கொண்ட ஒருவரால் பிரச்சினையின் பல கோணங்களை அலசி ஆராய முடியும். இது சிக்கலைத் தீர்ப்பதை எளிதாக்கும்.
தலைமைப் பண்பு
எந்த ஒரு காரியத்தையும் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்லும் வகையில் மனத்துணிவு கொள்ள வேண்டும். ஒரு வேலையைத் தைரியத்துடன் தொடங்கவும் அதை முன்னெடுத்துச் செல்லவும் தலைமைப் பண்பு மிகவும் உதவியாக இருக்கும். ஒரு குழுவாகப் பார்க்க வேண்டிய வேலையை ஒருங்கிணைக்கவும் மேம்படுத்தவும் இந்தத் தலைமைப் பண்பு அவசியமானது.
அசாதாரணமான சூழல்களைச் சமாளிக்கும் தன்மை
எப்போதும் நமக்கு உகந்த சூழல் அமையும் எனச் சொல்ல முடியாது. நமது எதிர்பார்ப்புக்கு எதிரான சூழல்களையும் நாம் எதிர்கொள்ள நேரலாம். அதைச் சமாளிக்கும் திறமையுடன் இருந்தால் மட்டுமே நம்மால் வெற்றி என்னும் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும். இது மிகவும் அடிப்படையான அம்சம். கூட்டுப் பறவை போன்ற குணங்களைக் கொண்டிருந்தால் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.
சுய மதிப்பீடு
நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது, நமது பலம் எது, பலவீனம் எது என்பன பற்றிய தெளிவு இருக்க வேண்டும். பெரும்பாலான கல்லூரி/பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை மதிப்பீடு செய்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.
வெற்றி தாகம்
வெற்றி என்பது அதிருஷ்டத்தால் அமையாது. அது கடும் உழைப்பால்தான் சாத்தியப்படும். வெற்றி பெற வேண்டும் என்னும் தாகம் இருந்தால் மட்டுமே அதிருஷ்டம் என்பதை நம்பாமல் கடுமையாக உழைப்போம். அதிருஷ்டம் என்பது ஒருவேளை உண்மையாக இருந்தால்கூட திறமைமிக்க உழைப்பாளிகளில் ஒருவரைத் தான் அதிருஷ்டமும் தேர்ந்தெடுக்கும் என்பதை மறந்துவிடலாகாது.
நகைச்சுவை உணர்வு
வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முயல வேண்டும். தவறுகளால் சோர்ந்துவிடக் கூடாது. நகைச்சுவை உணர்வு இருப்பது நமது சோர்வுகளிலிருந்து நம்மைக் கைதூக்கிவிடும்.
ஆக கல்லூரி/பல்கலைக் கழகங்களில் வெற்றி பெற்று வெளியுலகில் காலடி எடுத்து வைக்கும்போது இத்தகைய திறமைகளையும் வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். இந்தத் திறமைகளுடன் வாழ்க்கையை நீங்கள் எதிர்கொள்ளும்போது வேலை முதலிய சமூகச் சிக்கல்களையும் எளிதாக வெற்றிகொண்டு நீங்கள் வெற்றியாளர்களாக வலம்வரலாம் என்பதில் சந்தேகமில்லை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி