ஷி ஹூவாங்டி அரசரும், சீனப் பெருஞ்சுவர் உருவான வரலாறும்





உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு.

சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம்.இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது,

இது யாலுநதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 லிருந்து 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும், தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும், எதிரிகளின் நகர்வுகள் குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால், மலை முகடுகளிலும், சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும், சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).

உலக வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னனின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் சீனாவின் வரலாற்றுப் பின்னனியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுகுன்றி சீனா நிறைய சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தது. சிற்றரசர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு வந்தனர். அதன் காரணமாக சில சிற்றரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயின. அனைத்து சிற்றரசுகளிலும் பலம் பொருந்தியதாக விளங்கியது சின் (Qin) அரசு. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.

ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேயே அரியனை ஏறினார். ஆனால் 21-ஆவது வயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைகளுக்கு வந்தது. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள் மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38-தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி 'முதல் பேரரசர்' என்பது அதன் பொருள். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின் கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார்.

ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடந்ததற்கு காரணம் என்பதை உணர்ந்த அவர் 'பியூடல் சிஸ்டம்' எனப்படும் பிரபுத்துவ அரசு முறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான்.
அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.

இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும், வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும் ஒரு செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டி. கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்' உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி.

வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறு சிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது.

சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.

பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்த பண்புகள் ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவும், முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறனும், எதிரிகளை திணறடிக்கும் தைரியமும், ஒற்றுமையே பலம் என்ற அவரது நம்பிக்கையும்தான்.

ஆனால் இதற்காக அவர் தன் மக்களிடம் சிறந்த அரசன் என்ற நன்மதிப்பை இழக்கவேண்டியதாயிற்று.


சீன பெருஞ்சுவரின் தற்போதைய நிலை : 
பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை.
சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும், இன்னும் சில இடங்களில், சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன.
கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன.

சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது.
குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி, மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

Courtesy : http://www.kalviseithi.net/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி