பொறியியல்தான் படிக்க வேண்டுமா?

ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் முழுமையாக முடிப்பதே ஒரு சாதனை என்ற காலம் மாறி, இன்று பல விதங்களிலும் பெற்ற விழிப்புணர்வு மூலமாக, பெரும்பாலமான மாணவர்கள் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்து மேற்படிப்புக்கும் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலான மாணவர்களின் தேர்வு பி.ஏ. பி.காம்., போன்ற படிப்புக்களாகவே இருந்தது. தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்பட்ட காலங்களில் மாணவர்கள் "சிவில் இன்ஞினியரிங்" படிப்பினை அதிகம் தேர்ந்தெடுத்தனர். காலப்போக்கில் படிப்படியாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் ஆங்காங்கே ஆரம்பமாயின. ஆரம்பமாகும் கல்லூரிகள் எல்லாம் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஞினியரிங் பாடங்களையே கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் ஒரு சில கல்லூரிகள் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப படிப்பினை அறிமுகப்படுத்த ஆரம்பித்தன.

மாற்றத்தை ஏற்படுத்திய தகவல் தொழில்நுட்பத் துறை
ஒரு வித கலக்கத்தோடு தகவல் தொழில்நுட்பத் துறையை தேர்ந்தெடுத்தவர்கள் அவர்கள் கனவிலும் நினைத்திராத வண்ணம் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு, இதற்கு முன்னர் தங்கள் பெற்றோர், உறவினர், அரசு ஊழியர் என பலரும் 30 வருடங்கள் வேலை பார்த்தும் பெற்றிராத சம்பளம் என ராஜ உபசரிப்போடு வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
ஐ.டி. துறையில் இந்தியாவில் ஏற்பட்ட அபரிவித வளர்ச்சியும், சம்பளமும் மாணவர்களை ஐ.டி. துறையின் பக்கம் இழுத்தது. மருத்துவத்திற்கு மட்டுமே நன்கொடை என்றிருந்த நிலையை ஐ.டி. போன்ற துறைகளை உடைய கல்லுரிகள் மாற்றின. பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் படித்த பின் பெறப்போகும் வருமானத்தைக் கருத்தில் கொண்டு தாராளமாக நன்கொடைகளை வழங்க தயாராயினர்.
வளம் கொழித்த கல்லூரிகள்
பொறியியல் கல்லூரிகள் பணம் கொழிக்கும் அட்சய பாத்திரமாக இருப்பதை நன்குணர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் தாங்களும் பெரும் பணம் சம்பாதிக்கலாம் என்று போட்டி போட்டுக்கொண்டு பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்தனர், ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளில் ஐ.டி. துறையும் இணைந்துகொண்டது.
இடையில் ஐ.டி. துறையில் ஏற்பட்ட சிறிய தளர்ச்சி மாணவர்களை ஐ.டி. தவிர்த்து இ.சி.இ., பயோ டெக்னாலஜி போன்ற துறைகளை தேர்ந்தெடுக்க வைத்தது. கல்லுரிகள் பெருகப் பெருக மாணவர்கள் சேர்க்கையும் நிரம்பி வழிந்தது. கலை & அறிவியல் கல்லூரிகளை விட பொறியியல் படிப்புக்கு பணம் பல மடங்கு அதிகம் செலவானாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ஞினியர் என சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டனர். பொருளாதாரம் தடை புரிந்தாலும் , வங்கிக்கடன் மற்றும் இதர கடன்கள் மூலமாக தங்கள் குழந்தைகளின் கனவை நிறைவேற்றி வந்தனர்.
ஏமாற்றம் தரும் வளாகத்தேர்வு
கற்றவரெல்லாம் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை பெற்றனரா? என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. படித்தவர்கள் பலருக்கும் தாங்கள் எடுத்து படித்த துறைக்கு ஏற்ற வேலை எங்கு கிடைக்கும் என்பதே தெரியாமல் இருக்கின்றனர். இந்த குறையை போக்க பல கல்லூரிகளும் வளாகத்தேர்வு மூலமாக மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து நன்கொடையின் அளவை அதிகரித்தன. ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் போகப்போக அதுவும் ஒரு ஏமாற்று வேலையாக மாறிப்போயின.
பல கல்லூரிகளில் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் உடனடியாக பணியமர்த்தப்படாமல் காலம் தாழ்த்தி பணியமர்த்தப்பட்டனர். அதுவும் மாறி அடுத்த மாதம், அதற்கு அடுத்த மாதம் என காத்திருந்து படித்து முடித்து ஒராண்டாகியும் வேலை பெறாமல் இருப்போர் எண்ணிக்கை அதிகம். அது போக பெரிய நிறுவனத்தில் வேலை என்று கூறி தேர்ந்தெடுத்து அந்த பெரிய நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தாமல், அந்த நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் சிறு வேலைகளை செய்யும் குறு நிறுவனங்களிலும், பிபிஒ சென்டர்களிலும் குறைந்த  சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்படும் அவலமும் தொடர்ந்து நடந்து வருகிறது.
துறை மாறும் பொறியியலாளர்கள்
பொறியியல் படித்த பலர் தாங்கள் படித்த துறைக்கு சம்பந்தமே இல்லாமல் இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காகவா பல இலட்சம் செலவு செய்து பொறியியல் படித்தனர்.  அதற்கு பதிலாக பல ஆயிரங்கள் செலவு செய்து கலை & அறிவியல் கல்லூர்களில் படித்திருக்கலாமே. சரியான வழி நடத்துதலும், சிந்தனையுமின்றி துறை ரீதியான தேவைகளை கருத்தில் கொள்ளாமலும் பல மாணவர்கள் பொறியியலை தேர்ந்தெடுக்கின்றனர்.
தேவைகள் பல துறைகளிலும், பல படிப்புகளிலும் கொட்டி கிடக்கின்றது. முன்பு ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கு இருந்த முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து பொறியியலின் பக்கம் அனைவரின் முழுக் கவனத்தையும் செலுத்த வைத்துவிட்டது.
எதிர்கால தேவையை கருத்தில் கொள்ளாமல் அதிக என்ணிக்கையில் தொடங்கப்பட்ட கல்லூரிகளால், கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு குறைந்த உள் கட்டமைப்பு வசதிகளும் தரமின்மையும் ஒரு காரணமாகும்.
பொறியியலைக் கடந்து..
மனிதன் வாழ பொறியியலைப் போன்று கலை, அறிவியல், மருத்துவம், சுகாதாரம் என அனைத்து துறைகளுமே தேவைப்படுகிறது. எனவே அத்துறைகளையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். பெரு நகரங்கள், தொழில் நகரங்கள் தவிர்த்து மற்ற நகரங்களில் எத்தனை பொறியியலாளர்களுக்கு வேலை காத்திருக்கிறது? மற்ற நகரங்களில் பிற படிப்புக்களை படித்தவர்களுக்குத் தாம் அதிகம் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொள்ளாமல் நாம் பொறியியல் மட்டுமெ நோக்கம் என எண்ணுவது தவறு. அதற்காக பொறியியலே படிக்க வேண்டாம் என்று இல்லை.
10 பேர் குடியிருக்கக்கூடிய வீட்டில் 50 பேர் குடியிருக்க முடியுமா? முடியாதல்லவா. எனவே நாம் படிக்கும் படிப்பை தேர்ந்தெடுக்கும் போது பெற்றோர் சொன்னார்கள், என் நண்பன் இந்த படிப்பை எடுத்திருக்கிறான், இப்பொழுது இந்த துறை படித்தவர்களுக்குத்தான் வேலை என்றெல்லாம் பாராமல் 
எந்த துறையில் தன்னால் சாதிக்க இயலும்?
அடுத்து வரும் ஆண்டுகளில் எந்தத் துறை சிறந்து விளங்கும்?
எந்த ஊரில் வேலை பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன்?
அந்த ஊரில் வாழ எவ்வளவு ஊதியம் தேவை?
என பல கேள்விகளுக்கும் விடை கண்டு தகுந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் தேவையின்றி பொருளாதார இழப்பு, கால விரயம், மன நெருக்கடி போன்றவை ஏற்படாமல் நல்ல, மகிழ்வான வேலை வாய்ப்பைப் பெறலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி