கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களை அறிவிக்கக் கோரி பொதுநல வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்


இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்கள் குறித்து அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வி.ஈஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டத்தின் நோக்கம் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் சட்டத்தின் படி, பயனடையாத மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு) 25 சதவீத இடம் ஒதுக்க வேண்டும்.
ஆனால், இந்தச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஏழைக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்தில் 5 சதவீத இடம் பயனடையாதவர்களுக்கும், 10 சதவீதம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும், 4 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கும், 6 சதவீதம் ஏழைக் குழந்தைகளுக்கும் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எத்தனை இடங்கள் உள்ளன என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் உள்ள 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும். கலந்தாய்வு முறையில் மாவட்ட பள்ளிகளில் காலியாக இருக்கும் அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் என்.பொன்ராஜ் ஆஜரானார். மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி