மும்பை, ஏப்.2-
புதிய வங்கிகளுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, புதிய வங்கிகளை தொடங்க மொத்தம் 25 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு முதற்கட்டமாக ஐ.டி.எப்.சி. லிமிடெட், பந்தன் ஃபினான்சியல் சர்வீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு புதிய வங்கி தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி இன்று வழங்கியது.
இந்த அனுமதி 18 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்பதால் அதற்குள் இந்நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மும்பையை சார்ந்த ஐ.டி.எப்.சி நிறுவனம் அடிப்படை கட்டமைப்புக்கான கடன்களை வழங்கி வருகிறது. கொல்கத்தாவை சார்ந்த பந்தன் ஃபினான்சியல் சர்வீசஸ், சிறுகடன்களை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
2004ம் ஆண்டு யெஸ் வங்கிக்கு பிறகு இதுவரை எந்த புதிய வங்கியும் உருவாகவில்லை. இந்நிலையில், நிதிச் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு புதிய வங்கிகளை தொடங்குவதற்கான உரிமம் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.