ஏழு கல்வி நிறுவனங்களின் எம்.எட். படிப்புக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஏழு கல்வி நிறுவனங்களின் எம்.எட். முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரி, ஸ்டான்லி கல்வியியல் கல்லூரி உள்பட ஏழு கல்வி நிறுவனங்கள், கட் ஆஃப் தேதிக்குள் தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு மன்றத்தின் (நாக்) அங்கீகாரச் சான்றிதழ் பெறவில்லை. அதனால், 2013-14 ஆம் ஆண்டுக்கான எம்.எட். முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஏழு கல்வி நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ராஜா முன்பு நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, வழக்குரைஞர் ஆர்.சுரேஷ்குமார் ஆஜராகி, நாக் நிர்ணயித்த கட் ஆஃப் தேதியின் போது, அதன் ஆன் லைன் இணையதளம் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை செயல்படவில்லை. அதனால், அவர்கள் நிர்ணயித்த தேதிக்குள் சான்றிதழ் பெற முடியவில்லை என தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களில் ஒரு கல்வி நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி நாக் "பி' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதர மனுதாரர்கள் சான்றிதழ் பெறுவதற்காக நாக்-குக்கு அனுப்பிய விண்ணப்பங்கள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.

அதன்படி சில நிறுவனங்களில் கடந்த ஜனவரி மாதம் நாக் குழு ஆய்வு நடத்தியுள்ளது. அதனால், மனுதாரர்கள் நாக்-கின் அங்கீகார சான்றிதழ் பெறவில்லை என்று குறை கூற முடியாது.
எனவே, அவர்களது நிறுவனங்களில் எம்.எட்., முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க மறுத்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்தப் படிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி