தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு அதிகாரபூர்வ பட்டியல் அறிவிப்பு: ஆண்களை விட பெண்கள் அதிகம்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். 39 தொகுதிக ளிலும் இறுதி வாக்குப்பதிவு பட்டி யலையும் அவர் வெளியிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பிரவீண்குமார் சனிக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 24-ம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. அன்று நள்ளிரவு 1 மணியளவில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தகவல் கிடைக்கப்பெற்றது. சிறு தவறுகூட வந்துவிடக்கூடாது என்பதால் வாக்குப்பதிவு தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை வாக்குச்சாவடிகள் வாரியாக சரிபார்க்க வேண்டியிருந்தது. அதனால்தான் துல்லியமான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட சற்று காலதாமதமானது.

வாக்குப்பதிவு தொடர்பாக இறுதிசெய்யப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 73.67 சதவீதம் ஆகும். ஆண் வாக்காளர்களில் 73.49 சதவீதம் பேரும் பெண் வாக்காளர்களில் 73.85 சதவீதம் பேரும் மற்றவர்கள் (திருநங்கைகள்) 12.72 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

அதிகபட்ச அளவாக தருமபுரி தொகுதியில் 81.07 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 60.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண் வாக்காளர்களில் தருமபுரியில் அதிகபட்சமாக 81.58 சதவீதமும் பெண் வாக்காளர்களில் அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 81.91 சதவீதமும் வாக்களித்துள்ளனர். தபால் ஓட்டுக்காக சுமார் 2 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. தபால் வாக்குகளையும் சேர்த்தால் வாக்குப்பதிவு சதவீதம் 0.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கக் கூடும்.

சென்னை மாவட்டத்தில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 61.83 சதவீதம் ஆகும். ஆண்கள் வாக்குப்பதிவு 63.59 சதவீதமாகவும், பெண்கள் வாக்குப்பதிவு 60.09 சதவீதமாகவும், மற்றவர்களின் (திருநங்கைகள்) வாக்குப்பதிவு 2.29 சதவீதமாகவும் இருந்தது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 64.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 66.2 சதவீதம், பெண்கள் 62.73 சதவீதம் ஆகும். தேர்தல் நடத்தை விதிகள் மே 28-ம் தேதி வரை அமலில் இருக்கும். மறுவாக்குப்பதிவு இல்லாத சூழல் ஏற்படும் பட்சத்தில் நடத்தை விதிமுறைகளை சற்று தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி