ஏப்ரல் 23 , உலக புத்தக தினம் .

வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்தநாளையே உலக புத்தக தினமாக கொண்டாடுகிறோம் . புத்தகங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது . புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு பள்ளிகளில் தொடங்கினாலும் , பள்ளிகளிலேயே முடிவதில்லை , நம் ஆயுள் வரை தொடர்கிறது . எந்த காலகட்டத்திலும் நம்மைக் கைவிடாத ஒரே நண்பன், " புத்தகம் " மட்டுமே .புத்தகங்கள் நமக்கு அளிக்கும் அற்புதங்கள் ஏராளம் . ஒவ்வொரு புத்தகமும் நாம் அறியாத பல கதவுகளைத் திறக்கிறது .

மனிதனது கண்டுபிடிப்புகளில் புத்தகம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது . எத்தனையோ சாதனையாளர்கள் உருவானதற்கும் , இன்று உருவாகிக் கொண்டிருப்பதற்கும் புத்தகங்களே காரணம் . புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை கிணற்றுத் தவளை போலத்தான் இருக்கும் . புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையின் பாதி சுகத்தை இழந்து விடுகிறார்கள் . ஒரு நல்ல புத்தகம் நமக்கு அளிக்கும் களிப்பும் , ஆறுதலும் மிக அதிகம் . வாழ்க்கையே முடிந்துபோனதாக நினைத்து , மனதுடைந்து இருக்கும் சூழலில் "உலகம் ரொம்ப பெரியது , உன் வாழ்க்கையும் தான் " என்று ஒரு புத்தகம் நம்மைத் தேற்றி அறுதல் தருகிறது .


ஒரு புத்தகத்தை நாம் படிக்கும் போது நமது கற்பனைவளம் அதிகரிக்கிறது . நமது சிந்திக்கும் ஆற்றல் அதிகமாகிறது . ஒரு புத்தகத்தை ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் நமக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது . புத்தகம் அட்சயப்பாத்திரம் போலவே நமக்கு படிக்க படிக்க இன்பத்தைக் கொடுக்கிறது . 

புத்தகங்களும் , இசையும் இல்லாமல் என்னால் வாழவே முடியாது . என் வாழ்க்கையின் மிகக் கடினமான சூழல்களை புத்தகங்களின் துணை கொண்டும் , இசையின் துணை கொண்டும் தான் கடந்து வந்திருக்கிறேன் . நமது அத்துனை துன்பங்களையும் , துயரங்களையும் ஒரு புத்தகத்தின் நான்கு வரிகளோ அல்லது ஒரு நல்ல இசையோ மாற்றி விடுகிறது . நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்தகங்களும் , இசையும் கண்டிப்பாக தேவை . புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் , கண் இருந்தும் குருடர்கள் . இசை கேட்கும் பழக்கம் இல்லாதவர்கள் , காது இருந்தும் செவிடர்கள் .

வாழ்க்கையைக் கொண்டாட புத்தகங்களும் , இசையும் தேவை . புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூறும் காரணம் " படிக்கக் கூடாதுன்னு இல்ல ,படிக்க நேரம் இல்லை " . பணத்தைச் சேர்க்க ஒதுக்கும் நேரத்தைக் கொஞ்சம் புத்தகத்துக்கும் ஒதுக்குங்கள் . பணத்தால் நிலையான மகிழ்ச்சியையும் , நிலையான அமைதியையும் தரமுடியாது . ஆனால் , புத்தகம் தரும் . இதுவரை இல்லையென்றாலும் இன்றிலிருந்தாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள் . இப்பொழுதே கிணற்றை ( வீட்டை ) விட்டு வெளியே வாருங்கள் .அருகில் இருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகமேனும் வாங்குங்கள் . வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பியுங்கள் .

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் புத்தகங்களுடன் !

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி