தமிழக பள்ளிகளில் CCE மதிப்பீடு நடைமுறை மிக மோசமாகவே இருக்கிறது: பத்ரி சேஷாத்ரி

புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாமா?

கடந்த 2009ல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'கன்டினுவஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் எவால்யுவேஷன்' (சி.சி.இ.,) எனப்படும் மதிப்பீட்டு முறை அமலுக்கு வந்தது. அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல், இந்த மதிப்பீட்டு முறை, முந்தைய முறையை விட சிறந்தது என்ற, காரணத்தால் இதனை வலியுறுத்தினார்.

முந்தைய மதிப்பீட்டு முறையில், காலிறுதி, அரையிறுதி, ஆண்டிறுதி என்று, மூன்று தேர்வுகள் இருக்கும். பெரும்பாலும் ஆண்டிறுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டும்தான், அடுத்த வகுப்பிற்கு செல்ல தகுதி கணிப்பாக எடுத்துகொள்ளப்படும். இந்த மதிப்பீட்டு முறை, மனப்பாடம் செய்வதை மட்டுமே ஊக்குவிக்கிறது என்ற, குற்றச்சாட்டு இருந்தது. மாறாக, சி.சி.இ., முறையில் ஆண்டு முழுவதும் நடக்கும் நான்கு 'பார்மேடிவ்' தேர்வுகள், இரண்டு 'சம்மேடிவ்' தேர்வுகள், அவை தவிர பல்வேறு 'ப்ராஜெக்ட்'கள் என, அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
சி.சி.இ., நல்ல மதிப்பீட்டு முறையாகத்தானே தெரிகிறது என, சொல்வீர்கள். ஆனால், நடைமுறை மிக மோசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு பாடத்துக்கான ஆசிரியர்களும் ஆளுக்கு இத்தனை 'ப்ராஜெக்ட்' என்று, கொடுத்து விடுகின்றனர். இது தவிர, பாட திட்டத்தில் வேறு ஏகப்பட்ட பாடங்கள். இவ்வாறு கொடுக்கப்படும் 'ப்ராஜெக்ட்'களை எந்த மாணவரும் தானாக செய்ய முடியாது. மாறாக, மாணவர்களின் பெற்றோர் தான் இந்த 'ப்ராஜெக்ட்'களை செய்யவேண்டி உள்ளது. 'சார்ட் பேப்பர்', 'கலர் பிரின்ட் அவுட்' என்று, ஒவ்வொரு 'ப்ராஜெக்ட்'டுக்கும் நிறைய செலவாகிறது. இதை காரணம் காட்டி, பிரின்டர் நிறுவனங்கள் விளம்பரம் செய்யவே ஆரம்பித்து விட்டன. இன்ஜினியரிங் அல்லது பி.எட்., படிக்கும் மாணவர்கள் பலரும், தங்களுக்கான கல்லூரி 'ப்ராஜெக்ட்'களை, காசு கொடுத்து, வாங்கி சமர்ப்பிப்பது போல, இன்று பள்ளி மாணவர்களுமே காசுக்கு வாங்கிய, அல்லது பெற்றோரை வைத்து செய்த 'ப்ராஜெக்ட்'களை பள்ளிக்கூடத்துக்கு தருகின்றனர்.
இந்த 'ப்ராஜெக்ட்'களை திருத்தி, இவற்றுக்கு மதிப்பெண்கள் போட்டு இந்த ஆவணங்களை பத்திரமாக வைக்க ஆசிரியர்களுக்கு நிறைய நேரம் செலவாகிறது என்று, பல ஆசிரியர்களும் குறை சொல்கின்றனர். சி.பி.எஸ்.இ., அமைப்பே, இந்த சி.சி.இ., முறையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற, குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், இது குறித்து எந்த விவாதமும் இல்லாமல், தமிழக அரசும் கண்ணை மூடிக்கொண்டு, சி.சி.இ., முறையை அமல்படுத்த இறங்கிவிட்டது. இவ்வாறு, சி.பி.எஸ்.இ., சில முடிவுகள் எடுப்பதும், அவற்றை, தமிழகம் போன்ற மாநிலங்கள் எந்த பரிசீலனையும் செய்யாமல், அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றுவதும், வாடிக்கையாகி வருகிறது. தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., முறையில் கல்வி பயில்பவர்கள், மொத்த மாணவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்கள். கடந்த ஆண்டு, சமச்சீர் கல்வியின் கீழ், ஏறத்தாழ எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை எழுதினர். ஆனால், அதே ஆண்டு, சி.பி.எஸ்.இ., முறையில், தமிழகத்தில் இருந்து பிளஸ் 2 பொது தேர்வை எழுதியவர்கள் ஏறத்தாழ 8,000 பேர் மட்டுமே!
பெரும்பாலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மேல்தட்டு குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே படிக்கின்றனர். இவற்றில் நடக்கும் பரிசோதனை முயற்சிகளை, அப்படியே, மறுபேச்சு பேசாமல், சமச்சீர் கல்வியின் கீழான பள்ளிகளில் தமிழக அரசு புகுத்தி விடுகிறது. தமிழக அரசின்கீழ் இயங்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. பல குழந்தைகளின் பெற்றோர் கல்வி அறிவு அற்றவர்கள். அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பில் எந்தவித உதவியும் செய்ய முடியாது. 'ப்ராஜெக்ட்' வேலைகளை செய்ய, கணினியும், இணைய இணைப்பும் அவசியமாகி விடுகிறது. இந்த வசதிகள் ஏதுமற்ற குழந்தைகளுக்கு இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது. சி.பி.எஸ்.இ., முறையில், ஏற்கனவே, பத்தாம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் இல்லை என்றாகிவிட்டது. மாணவர் விரும்பினால் பொது தேர்வை எழுதலாம். அல்லது பள்ளிக்கூடம் நடத்தும் தேர்வை எழுதினால் போதுமானது. தமிழகமும், எந்த விவாதமும் இல்லாமல், இதே முறையை சமச்சீர் பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவு எடுத்திருப்பதாக, சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். தற்போது, 67 சதவீத, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்கள், பொது தேர்வை எழுதுவது இல்லை. இந்த முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அள்ளித் தரப்படுகின்றன. மதிப்பெண்கள் தான் அதிகமாகி உள்ளனவே தவிர, மாணவர்களின் தரத்தில் எந்த உயர்வும் இல்லை. ஏற்கனவே 100 சதவீதம் தேர்ச்சி என்ற, நிலையை நோக்கிச் செல்ல விரும்பும் தமிழகத்தின் சமச்சீர் பள்ளிகள் அனைத்தும், இந்த முறை வந்துவிட்டால், தங்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பாடத்திலும் 100/100 மதிப்பெண்கள் போட்டுவிடுவார்கள். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஏற்கனவே மதிப்பெண்கள் தருவதிலிருந்து நகர்ந்து ஏ,பி,சி,டி என்னும் 'கிரேடு'களை கொடுக்கத் துவங்கிவிட்டனர். தமிழகப் பள்ளி களிலும் இதே நிலை புகுத்தப்படும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மோசமானவை அல்ல. ஆனால், அவை தமிழக பள்ளி கல்வி துறையால் அமல்படுத்தப்படும் முறையில்தான் சிக்கலே. பொது விவாதம் ஏதும் நடைபெறுவது இல்லை. இதுகுறித்து, பெற்றோர், கல்வியாளர்கள் என்று, யாரும் கலந்து ஆலோசிப்பதாக தெரியவில்லை. ஏன், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களுமே கலந்துகொள்வதாக தெரியவில்லை. அவ்வப்போது அரசாணைகள் மட்டும் வருகின்றன. மாறியுள்ள நடைமுறைக்கு ஏற்ப, ஆசிரியர்களாக பார்த்து மாறிக்கொள்ள வேண்டும். பல தமிழகப் பள்ளிகளில், வேண்டிய அளவு ஆசிரியர்கள் கிடையாது. உள்கட்டுமானங்கள் கிடையாது. பெண்களுக்கான கழிப்பறைகள் கிடையாது. இருக்கும் ஆசிரியர்களின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. இவற்றை முதலில் மேம்படுத்த வேண்டும். மதிப்பீட்டு முறையை எந்த விவாதமும் இன்றி மாற்றுவதால் மாணவர்களின் கல்வி திறன் மேம்பாடு அடையாது. குழப்பம்தான் தொடரும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி