வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை, அரசியல் கட்சியினர் கொடுத்தால், பொதுமக்கள் அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் நேரடியாகபதிவேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
"இ-மெயில்' முகவரி : இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார், சிறப்பு தேர்தல் அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) அஜய் யாதவ் ஆகியோர் கூறியதாவது: தேர்தலில் வாக்காளர்களுக்கு, யாரேனும் பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுத்தால், அது தொடர்பான விவரங்களை, நேரடியாக, தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கொடுக்கலாம். இதுபோன்ற புகார்களை தெரிவிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ள, "இ-மெயில்' முகவரி மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
இவை தவிர, புதிதாக, http://elections.tn.gov.in/complaints என்ற இணையதளத்தில், பொதுமக்கள் நேரடியாக, பதிவேற்றம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், "கம்ப்ளைன்ட்' என்ற வார்த்தையை, "கிளிக்' செய்தால், பணம் பட்டுவாடா, பரிசு மற்றும் டோக்கன் வினியோகம், மதுபானம் வினியோகம், விதிகளுக்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர், அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வாகனங்கள், பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்தி போன்ற விவரம் இருக்கும்.
அதில், "கிளிக்' செய்து, போட்டோ, வீடியோ போன்றவற்றை,பதிவேற்றம் செய்யலாம். அத்துடன், எந்த மாவட்டம் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை, குறிப்பிட வேண்டும். புகார் அனுப்புபவர் தன் பெயர் மற்றும் மொபைல் எண்ணை, விரும்பினால் தெரிவிக்கலாம். போட்டோ மற்றும் வீடியோ எடுப்பவர் குறித்த விவரம் எதுவும், தேர்தல் கமிஷனால் சேமிக்கப்படாது. எனவே,தேர்தல் தொடர்பான, புகார்களை மட்டும், பொதுமக்கள் பயமின்றி,தவறுகளை ஆதாரங்களுடன் அனுப்பலாம். "ஆண்ட்ராய்டு'மொபைல் போன் வைத்திருப்போர், போனில் இருந்தே புகார்களை அனுப்பலாம். அதில், தேர்தல் விதிமுறைகளும் இடம் பெற்றுள்ளன. விரும்பியவர்கள் அதை பார்த்துக் கொள்ளலாம். பொதுமக்கள் அனுப்பும் புகார்கள், தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு வரும். அங்கிருந்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, மாவட்ட அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலமாக விவரம் தெரிவிக்கப்படும்; அவர்கள் ஆய்வு மேற்கொள்வர்.
தனி குழு : பணம் கொடுத்து, பத்திரிகைகளில் மற்றும் "டிவி'களில்,குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக செய்தி வெளியிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஒரு புகார் தற்போது வந்துள்ளது. இப்புகார் குறித்து விசாரிக்க, மீடியா கண்காணிப்பு குழு, ஏப்., 1ம் தேதி கூடுகிறது. பணம் கொடுத்து வெளியிடப்பட்ட செய்தி என, அக்குழு முடிவு செய்தால், விளம்பரமாக அந்த செய்தி கருதப்பட்டு, அதற்குரிய பணம், வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
செய்தியை வெளியிட்டது, பத்திரிகையாக இருந்தால், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'விலும், "டிவி'யாக இருந்தால், "பிராட்காஸ்ட் கவுன்சில் ஆப் இந்தியா'விலும், புகார் செய்யப்படும். அதேபோல், சமூக இணையதளங்களும் கண்காணிக்கப்படும். அரசியல் கட்சித் தலைவர்களால் நடத்தப்படும், "டிவி'நிகழ்ச்சிகளும் கண்காணிக்கப்படும். தமிழகத்தில், 10 "டிவி'செய்திகள் கண்காணிக்கப்படுகின்றன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.