![]() |
மிதக்கும் அணுமின் நிலையம் |
அணு மின் நிலையம் (nuclear power plant, NPP) ஒன்று அல்லது பல அணுக்கரு உலையிலிருந்து வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தும் ஓர் அனல் மின் நிலையம் ஆகும்
.இதுவும் வழக்கமான அனல் மின் நிலையம் போன்றே வெப்பம் மூலம் நீராவி உருவாக்கப்பட்டு நீராவிச் சுழலியுடன்(turbon) இணைக்கப்பட்டுள்ள மின்னாக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஓரிடத்தில் புதிதாக அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமானால் அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மாநில அரசின் தயவு தேவை. சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
விலாசம் தெரியாத கட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள்.
ரஷியா இப்போது மேற்கொண்டுள்ள மிதக்கும் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை. ரஷியா இப்போது மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அணுமின் நிலையங்கள் ரஷியாவுக்கு வடக்கே பனிக்கட்டியால் மூடப்பட்ட கடலில் கரையோரமாக நிறுத்தப்பட்டு மின் உற்பத்தியில் ஈடுபடும்.இந்த மின்சாரம் கரையோரமாக உள்ள இடங்களுக்கு அளிக்கப்படும்.
கப்பல்களில் அணு உலை இடம் பெறுவது என்பது புதிது அல்ல. பனிக்கட்டியால் மூடப்பட்ட கடல் பகுதிகளில் பனிக்கட்டியை உடைத்து கப்பல்கள் செல்வதற்கு வழி அமைக்க ரஷியா ஏற்கெனவே விசேஷக் கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இவை பனிக்கட்டி உடைப்பான் கப்பல்கள் ( icebreakers) என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அணுசக்தியால் இயங்குவை. அதாவது இவற்றில் அணு உலைகள் உண்டு. இக் கப்பல்கள் இயங்க இந்த அணு உலைகள் உதவுகின்றன
இதே பாணியில் தான் ரஷியா மிதக்கும் அணுமின் நிலையங்கள் உருவாக்கி வருகிற்து.. 2015 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஏழு மிதக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டி முடிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.
இந்த அணுமின் நிலையம் பெரிய மிதவை மீது அமைந்திருக்கும். ஆகவே இதைத் தேவையான இடத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதில் தலா 70 மெகாவாட் மின்சாரத்தைத் உற்பத்தி செய்கின்ற இரு அணு உலைகள் இருக்கும். தேவையானால் மின் உற்பத்திக்குப் பதில் கடல் நீரைக் குடி நீராக மாற்றுவதற்கும் இந்த அணு உலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இரு முக்கிய சாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் கடலோரமாக அமைந்துள்ளன. அந்த அளவில் அவற்றுக்கு ஏட்டளவில் சுனாமி ஆபத்து உள்ளது. சுனாமி அலைகள் கரையோரப் பகுதிகளைத் தான் தாக்கும். கடலில் உள்ள கப்பல்களுக்கு சுனாமியால் ஆபத்து கிடையாது.
ஆகவே மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கும் சுனாமி ஆபத்து இராது என்று கூறப்படுகிறது. பூகம்பத்தால் தாக்கப்படுகிற ஆபத்து மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.
ரஷிய நிறுவனம் தயாரிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையங்களை வாங்கிக் கொள்வதில் சீனா, இந்தோனேசியா, மலேசியா, அர்ஜெண்டினா உட்பட 15 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.