வளாகத் தேர்வு: தமிழ் வழி பி.இ. மாணவர்கள் புறக்கணிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பி.இ. சிவில் பிரிவு படிக்கும் மாணவர்களை வளாகத் தேர்வுக்கு வந்த எந்தவொரு நிறுவனமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.

அதேபோல், மெக்கானிக்கல் பிரிவிலும் ஒரு சில மாணவர்களே பணி நியமனம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கே இந்த நிலை என்றால், அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறிதான் என பேராசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரும்போது, ஆங்கில வழியில் இருக்கும் பாடங்களை படிக்கவும், புரிந்துகொள்ளவும் முடியாமல் திணறுவதைப் போக்கும் வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முறையாக தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் பிற உறுப்புக் கல்லூரிகளிலும் மெக்கானிக்கல், சிவில் ஆகிய இரண்டு பிரிவுகளில் மட்டும் இந்த தமிழ் வழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் முதல் பேட்ச் மாணவர்கள் வரும் ஜூன் மாதம் படிப்பை முடித்து வெளியே வரவுள்ளனர்.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட வளாகத் தேர்வில் இந்த மாணவர்களை நிறுவனங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் வழி பி.இ. (சிவில்) நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் கூறியது:
2010-ஆம் ஆண்டில் இந்தப் படிப்பில் சேரும்போது, தமிழ் வழியில் படிக்கும்போது வேலை கிடைக்குமா என்ற அச்சத்துடன்தான் இருந்தோம். இருந்தபோதும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறதே என்ற ஆர்வத்தில் சேர்ந்துவிட்டோம்.
கல்லூரியில் சேர்ந்தவுடன் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில், பேராசிரியர்கள் எங்களுக்கு மிகுந்த ஊக்கமளித்தனர். ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சான்றிதழ்களிலும் தமிழ் வழியில் படித்ததாக குறிப்பிடப்பட்டிருக்காது. எனவே, வேலைவாய்ப்பு
கிடைப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
சான்றிதழ்களில் மூன்று இடங்களில்...
ஆனால், எங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்கள் ஒவ்வொன்றிலும் மூன்று இடங்களில் தமிழ் வழியில் படித்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவே எங்களுக்கு முதல் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை பணிக்கு தேர்வு செய்வதற்காக வளாகத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் சிவில் பிரிவு மாணவர்களை பணிக்கு தேர்வு செய்ய எல் அண்டு டி, டெக்னிப், பவர் கிரிட், சன் எடிசன் எனர்ஜி 20-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் பங்கேற்றன.
இதேபோல் மெக்கானிக்கல் மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக கோன் எலிவேட்டர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
60 பேரில் ஒருவர் கூட தேர்வாகவில்லை:
இதில் பி.இ. சிவில் ஆங்கில வழியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் 48 பேரும், தமிழ் வழியில் படிக்கும் 60 பேரும் பங்கேற்றோம். இதில் ஆங்கில வழியில் படித்த 48 பேரில் 14 பேரை மட்டும் நிறுவனங்கள் தேர்வு செய்தன.
தமிழ் வழி மாணவர்கள் 60 பேரில் ஒருவரைக் கூட நிறுவனங்கள் தேர்வு செய்யவில்லை. நேர்முகத் தேர்வில் எங்களிடம் பாடம் தொடர்பான கேள்விகூட கேட்கப்படவில்லை.
இதுபோல் தமிழ் வழி மெக்கானிக்கல் இறுதியாண்டு மாணவர்கள் 60 பேரில் 6 பேருக்கு மட்டுமே வளாகத் தேர்வில் நிறுவனங்கள் பணி வாய்ப்பை அளித்துள்ளன.
இதனால், எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது என மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் மற்றும் பல்கலைக்கழகம் தொழில் நிறுவன ஒருங்கிணைப்பு மைய இயக்குநர் டி. தியாகராஜன் ஆகியோர் கூறியது:
பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக, தமிழ் வழி பொறியியல் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி, நேர்முகத் தேர்வை எப்படி எதிர்கொள்வது, பயோ டேட்டா எப்படி தயார் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதோடு அனைத்து மாணவர்களுக்கும் கையேடு ஒன்றும் வழங்கப்படுகிறது.
தமிழ் வழி மாணவர்களை நிறுவனங்கள் புறக்கணிப்பதில்லை. மாணவர்கள்தான் திறமையை வெளிப்படுத்த தவறி விடுகின்றனர்.
அதிலும் சிவில் பிரிவு மாணவர்களை மட்டும்தான் நிறுவனங்கள் தேர்வு செய்யவில்லை. மெக்கானிக்கல் தமிழ் வழி மாணவர்கள் சிலரை நிறுவனங்கள் தேர்வு செய்திருக்கின்றன என்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி