மத்திய அரசின் "ஆதார்" திட்டத்துக்கு மூடுவிழா

"திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அரசின் எந்த ஒரு சேவையையும் பெற ஆதார் அட்டை அவசியமில்லை. இதுபோன்ற சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியம் என ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் வசிக்கும், அனைத்து குடி மக்களுக்கும், அவர்களை பற்றிய, அனைத்து விவரங்களையும், முறையாக பதிவு செய்வதற்காக, ஆதார் என்ற திட்டத்தை, 2009ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி, ஒவ்வொருவருக்கும், 12 இலக்கங்களை உடைய எண்ணுடன் கூடிய, அடையாள அட்டை வழங்கப்படும். அதில், ஒவ்வொருவரின், கைவிரல் ரேகை, பெயர், முகவரி ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், காங்., தலைமையிலான மத்திய அரசு, தீவிரம் காட்டியது. இதற்காக, இன்போசீஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த, நந்தன் நிலேகனியை, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தலைவராக நியமித்தது. பெரும்பாலானோருக்கு அடையாள அட்டை வழங்கப்படாத நிலையில், மத்திய அரசின் சேவைகளை பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்றும், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், சமையல் காஸ் மானியம் உள்ளிட்டவற்றின் கீழ், அரசால் வழங்கப்படும் பணம், ஆதார் அடையாள அட்டை திட்டம் மூலமாக, இனி நேரடியாக, சம்பந்தபட்டோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக ஆர்வலர், அருணா ராய், கர்நாடகா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி, புட்டாசாமி உள்ளிட்ட பலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "அரசின் சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியமில்லை" என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி, பி.எஸ்.சவுகான் தலைமையிலான, பெஞ்ச் முன் இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசின் சேவைகளை பெற, ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளோம். ஆனால், அந்த உத்தரவை பொருட்படுத்தாமல், அரசின் பல்வேறு துறைகளில், ஆதார் அட்டை கேட்கப்படுவதாக, பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர், தன் திருமணத்தை பதிவு செய்வதற்கு, ஆதார் அட்டை கேட்கப்படுவதாக கூறியுள்ளார். மற்றொருவர் தன் சொத்துக்களை பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கேட்கப்படுவதாக கூறியுள்ளார்.

"அரசின் சேவைகளை பெறுவதற்கு, ஆதார் அட்டை அவசியம்" என அரசு தரப்பில், ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என அறிய விரும்புகிறோம். அப்படி பிறப்பிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அது தொடர்பான அனைத்து உத்தரவுகளையும், அரசு வாபஸ் பெற வேண்டும். ஆதார் அடையாள அட்டைக்காக, பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட விவரங்களை, மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

ஒரு சில மாநிலங்களில், குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக, விசாரணை அமைப்புகள், ஆதார் அடையாள அட்டை ஆணையத்திடம், சம்பந்தப்பட்டோரின் தகவல்களை கேட்பதாக அறிகிறோம். இது தொடர்பான எந்த தகவல்களையும், ஆதார் அட்டை ஆணையம், யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.தனி நபரின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக செயல்படுத்தப்பட்டுள்ள, "பயோமெட்ரிக்" தொழில்நுட்பம், சோதித்து பார்க்கப்படாமலும், நம்பகத் தன்மை இன்றியும் உள்ளது. இத்திட்டத்துக்காக, பொதுமக்களின் பணம், தனியார் நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆதார் திட்டத்துக்கு, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "நாட்டின் குடிமகன்கள் அல்லாதவர்கள் கூட, இந்த திட்டத்தின் கீழ், தங்களை பதிவு செய்து கொள்ள முடியும். இதனால், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்படும்" என எதிர்க்கட்சிகள் கூறின. ஆனாலும் ஆதார் அட்டை திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு, ஆர்வமாகவும், தீவிரமாகவும் இருந்தது. சுப்ரீம் கோர்ட், தற்போது பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம் ஆதார் அட்டை திட்டம், முக்கியத்துவம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி