இன்று குருவி, நாளை நாம்!


காக்கை குருவி எங்கள் ஜாதி என்றவன் எங்கள் பாட்டன். அதாவது, சக மனிதனை நேசிப்பதைப் போல இதர உயிர்களையும் நேசி என்று இதற்குப் பொருள். நாங்கள்தான் சகமனிதர்களையே நேசிப்பதில்லையே, பாவம் பாரதி! ஒவ்வோராண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எதற்கென்றால், குருவியை அழிக்கும் சுற்றுச்சூழல் கேட்டைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கும் – நமது குழந்தைகளுக்கும் வர வேண்டும் என்பதற்காக.

மனித உயிர்களையே கணக்கிலெடுக்காமல் வளர்ந்து கொண்டிருக்கிறோம், சிட்டுக்குருவிகளையா பொருட்படுத்துவோம்? சிட்டுக்குருவியை, வண்ணத்துப் பூச்சியை, மைனாக் குஞ்சையெல்லாம் நின்று கவனிக்க நேரமிருக்கிறதா நமக்கு? நமது அவசரத்திலும் பேராசைகளிலும் முன்னே முன்னே என்று தாவும் முன்னேற்றப் பாய்ச்சலிலும் நாமிருக்கிறோம். இன்று நடுத்தர வயதைக் கடந்தவர்கள் சிறுவயதில் பார்த்து பரவசப்பட்ட ஒரு பறவையினம்தான் சிட்டுக் குருவி. விட்டு விடுதலையாகி நிற்போம் சிட்டுக்குருவியைப் போல என்று பாரதி அதை விடுதலைக்குக் குறியீடாக்கியிருக்கிறான். அதன் தானியமணி போன்ற குறுணிக் கண்கள், வெடுக் வெடுக்கென தலையைத் திருப்பம் அழகு, தத்துவதும் இடம் மாறி அமர்வதுமான கவர்ச்சிகளையெல்லாம் ரசித்துப் பாட்டாக்கியிருக்கிறான்.

நமது வீடுகளுக்குள் கூடு கட்டி வாழ்ந்த குருவிகளை இப்போது நாம் பார்க்க முடிவதில்லை. கீச் கீச் என்று கத்திக் கொண்டு தானியங்களைக் கொத்தித் தின்று கொண்டு, சட்டென்று சிறகடிக்கும் அழகைக் காண முடிவதில்லை. காரணம், சுற்றுச் சூழல் கேடுதான்.சிட்டுக்குருவிகள் குறைந்துவருவதைக் கண்டுபிடித்து முதலில் இங்கிலாந்தில்தான் கணக்கெடுக்க ஆரம்பித்தார்கள். 1920-க்குப் பின்னர் சிட்டுகுருவிகளின் எண்ணிக்கை நகரப்பகுதிகளில் முன்பு இருந்ததைவிட சுமார் 90 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக இந்த ஆராய்ச்சியின் வாயிலாகத் தெரியவந்தது. அதாவது குதிரைவண்டிகளில் கொண்டுசெல்லப்படும் மூட்டைகளிலிருந்து சிந்தும் தானியங்களையும், குதிரைகளின் கழிவுகளிலுள்ள செரிக்கப்படாத தானியங்களையும் உட்கொண்டு வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை உயரத்தொடங்கிய பின் குறைய ஆரம்பித்தன.

குருவிகள் அழிவுக்கு ஈயமில்லாத பெட்ரோல், செல்போன் உபயோகமும் முக்கிய காரணம். வாகனங்களுக்கு பயன்படுத்தும் அன்லீடட் பெட்ரோலில் உள்ள இரசாயனப் பொருட்கள், பறவைகளுக்கு உணவாகக்கூடிய முக்கியமான பூச்சிகளை கொன்று விடுகின்றன. இதேபோல் செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் குருவிகளின் இதயத்துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சின்னச் சிட்டுக்குருவி அழிந்து வருவதற்கு நாம் இவ்வளவு கவலைப்பட வேண்டுமா? வேண்டும். சிட்டுக்குருவிகள் நம் வாழ்வுக்கு ஆதாரமானவை. காடுகளில் வாழும் பறவைகள், விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் பெரும்பாலும் நகர்ப்புற வாசிகளாகிவிட்ட நமக்கு, நாம் வாழும் சுற்றுச்சூழலின் தரத்தை அறிந்து கொள்ளும் அளவுகோல், சமூகப் பறவையான சிட்டுக்குருவிகளே.

இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்திலும், பூமிக்கு அடியில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திலும் வாழும் தகுதி கொண்டவை சிட்டுக்குருவிகள். நாம் சுவாசிக்கும் அதே காற்றைத்தான் சுவாசிக்கின்றன. எங்கும் பறந்து திரியும் இந்தப் பறவைகளுக்கு அழிவு என்பது சுற்றுச்சூழலின் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான எச்சரிக்கை மணி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியே நாம் சுற்றுச் சூழலை கெடுத்துக் கொண்டேயிருந்தோம் என்றால், இன்று குருவி? நாளை… நாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி