மழைநீரை மறந்து... தண்ணீருக்கு தவமா?

நிஜமாகி விட கூடாது தாத்தாவின் கதை! வீட்டில் வாகனங்களை தண்ணீர் ஊற்றி கழுவியதாக, இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பின் தாத்தாக்கள் சொல்லப் போகும் கதையை கேட்கும் பேரப் பிள்ளைகள், "சும்மா புருடா விடாதீங்க தாத்தா... காரை தண்ணீர் ஊற்றி கழுவினாராம். 
நம்புற மாதிரி ஏதாவது சொல்லு தாத்தா..." என்று சிரித்தபடி எழுந்து போக போகிறார்கள். தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு இல்லாவிட்டால், இதுதான் நிஜமாகவே நடக்கப் போகிறது.

வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது, ஒரு குவளை தண்ணீரும், ஒரு துண்டு அச்சு வெல்லமும் கொடுத்துத்தான். இன்று ஒரு குடம் தண்ணீரை, ஒன்பது மைல் நடந்துதான் கொண்டு வரவேண்டுமென்ற நிலையில், வந்தோர் தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை.

இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை. ஆற்றிலே குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது.

வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டிய பின் விட்டுச் சென்ற நதியின் பள்ளங்கள், மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன. வளம் கொடுக்கும் வற்றாத நதிகளெல்லாம், வரன் கொடுத்த சிவன் தலையில் கை வைத்த கதைபோல், ஆலைக் கழிவுகளாலும்., சாலையோர சங்கடங்களின் கலப்பாலும் சாபம் பெற்று, கழிவுநீர் கால்வாய்களாய் சடுதியில் சுருங்கிவிட்டன.

ஆற்று நீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம் இன்று. என்ன செய்யலாம்? வீட்டில் வீணாகும் தண்ணீர் குழாய்களை உடனே சரி செய்யலாம். பிரஷ் செய்யும் போதும், ஷேவ் செய்யும்போதும், வாகனங்களை கழுவும்போதும், குளிக்கும் போதும்...இப்படி ஒவ்வொரு முறையும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம். ஒரு நாளில், ஒரு குழாயில், ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீண் ஆனால், ஓராண்டில் ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்பதுதான் பகீர் தகவல். ஆகவே இனியாவது ஒவ்வொரு துளியையும் சேமிக்கலாம் வாருங்கள்...!

மழைநீரை சேகரித்து, தலைமுறைகளை வாழ வைப்போம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த பொதுப் பணித் துறை சிறப்பு முதன்மை பொறியாளர் அருணாச்சலம்(ஓய்வு).

மழைநீரை இரண்டு வழிகளில் பாதுகாக்கலாம். மழை நீர் சேமிப்பு திட்டத்தின் மூலம், பள்ளம் தோண்டி பூமிக்குள் தண்ணீரை ஊடுருவச் செய்யலாம். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆழ்துளை கிணற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும் போது, வற்றாத நிலை ஏற்படும். இரண்டாவது முறை, மழை நீரை நேரடியாக பிடித்து, பாத்திரங்களில் சேகரிப்பது. சுத்தமான மொட்டை மாடியில் இருந்து பைப் மூலம், மழைநீரை சேகரித்து, கூழாங்கல், மணல், கரித்தூள், கரித்துண்டு இருக்கும், தொட்டியில் சேகரிப்பது. அதிலிருந்து சுத்தமான மழைநீரைப் பெறலாம். இதை குடிக்க, சமைக்க பயன்படுத்தலாம்.

தேங்காய் சிரட்டையை எரித்து, அதில் கிடைக்கும் கரித்தூளை மணலுடன் சேர்த்து கலந்தால், நீரிலுள்ள பாக்டீரியாக்களை நன்றாக வடிகட்டும். நீரில் அமிலம், வாயுக்கள் இருந்தாலும், வடிகட்டப்படும். வீடுகளில் கார் நிறுத்துமிடத்தில், பாதாளத் தொட்டி அமைத்து, மழைநீரை சேமிக்கலாம். ஒரு முறை செலவு செய்தால், பல தலைமுறைகள் வரை, கஷ்டமின்றி, மழைநீரை பயன்படுத்தலாம். பாதாள தொட்டி அமைக்க முடியாவிட்டால், ஆயிரம் லிட்டர் தொட்டி இரண்டு வாங்க வேண்டும். ஒரு தொட்டியில் பாதியளவு கூழாங்கல், மணல், கரித்துண்டுகள் நிரப்பி, மீதியில் மொட்டை மாடியில் வழியும் தண்ணீரை நிரப்ப வேண்டும். அதிலிருந்து மற்றொரு தொட்டியில், சுத்தமான தண்ணீரில் சேகரிக்க வேண்டும். மழைநீரில் நேரடியாக சூரியஒளி படாமல் பாதுகாத்தால், பல மாதங்கள் வரை, கெடாது. ஆண்டு முழுவதும் வெளியில் தண்ணீர் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி