வேலையைக் காதலி!

காதல் முதல் பார்வையில் வருகிறதா முப்பத்தி இரண்டாம் பார்வையில் வருகிறதா என்பது முக்கியமில்லை. ஆனால் அதற்கு முன்பாக முக்கியமாக காதலிக்க ஓர் ஆள் வேண்டும். அந்த ஆளை எப்படித் தேடுவது? அல்லது அந்த ஆள் நம்மைத் தேடி வர என்ன செய்ய வேண்டும்? காதலிக்கத் தயார் ஆவது போலத்தான் வேலை தேடத் தயார் ஆவதும்!

ஒரு சிறிய வித்தியாசம் காதலிக்க உரியவயசு வரவேண்டும். அதைப் பொதுவாக சம்பந்தப்பட்டவர்கள்தான் முனைந்து செய்ய வேண்டும். அதிகபட்சம் நண்பர்களின் சில மொக்கை ஐடியாக்கள் உதவும்.
ஆனால் வேலை பற்றிய எண்ணம் சில குடும்பங்களில் பிறந்தவுடனேயே தோன்றிவிடும். “இவனாவது இன்ஜினீயர் ஆகட்டும்,” “அப்பாவைப் போலவே டாக்டர் தான்!”, அல்லது “என்னைப் போல வக்கீலாகாமல் எது வேண்டுமானாலும் செய்யட்டும்!” இப்படி கூடிப் பேசுவது படித்த நடுத்தர குடும்பங்களில் அதிகம். கல்வி மற்றும் வேலைத் தேர்வில் பெற்றோர்கள் முடிவெடுப்பது இங்கு எல்லா தரப்பினரிடமும் நடந்து வருகிறது.

பெற்றோர்கள் தவிர ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள்தான் நம் வேலை சார்ந்த கனவுகளை பெரிதும் பாதிக்கிறார்கள். வாழ்க்கையில் என்ன ஆகப்போகிறோம் என்று தெரியாமல் குழ்ப்பத்தில் உள்ள மாணவர்களிடம் சிலர் அறிவுரை என்கிற பெயரில் இப்படி ஒரு புத்திமதி சொல்வார்கள்:

“நீ என்னவாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளை மிகச்சின்ன வயதிலேயே வைத்துக் கொண்டு அதற்கு தொடர்ந்து முயன்றால்தான் வெற்றி கிட்டும்!”
உண்மைதானே என்கிறீர்களா? உண்மை இல்லை என்பதுதான் யதார்த்தம்.இது அறியாமையால் காலம் காலமாகப்பரப்பப்பட்டு வரும் பொய். இந்த மாயை ஆசிரியர்களாலும் பேச்சாளர்களாலும் சில பல சுய உதவி கட்டுரையாளர்களாலும் பூதாகரமாக வளர்க்கப்பட்டுள்ளது.

நான் சொல்வது சந்தேகம் என்றால் நீங்களே ஒரு சிறு ஆய்வு செய்யுங்கள். இன்று சந்திக்கும் அனைவரையும், “இந்த வேலைக்கு வர வேண்டும் என்று எந்த வயதில் தீர்மானித்தீர்கள்?” என்று கேளுங்கள். அவர்களில் 10% க்கு மேல் “பள்ளி நாட்களிலேயே இந்த வேலைக்கு தான் வருவேன் என்று தீர்மானித்து இந்த வேலைக்கு வந்தேன்” என்று கூறினால், நான் என் ஒரு வருட வருமானத்தை கங்கா- காவிரி இணைப்புத் திட்டத்திற்கு எழுதித் தருகிறேன்!
உண்மையில் 1% பேருக்குத் தான் இந்த சிறு வயதிலேயே குறிக்கோள் என்பது ஏற்படுகிறது. அதுவும் விளையாட்டு, இசை, கலைகள், பரம்பரைத் தொழில்களில் மட்டும் தான் இது ஓரளவு சாத்தியம். நான்கஸ்டமர் சர்வீஸ் அதிகாரியாக பணி புரிவேன் என்று ஏழாவது படிக்கும் காலத்திலேயே நினைத்துக் கொள்வேன் என்று யாராவது சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா?

எழுபது, எண்பதுகளில் படித்தவர்களுக்கு கணினி என்று ஒரு தொழில் நுட்பம் தங்கள் வாழ்க்கையில் வருமென்றுதெரியுமா? ஐ.டியில் நுழைந்தவர்கள் பள்ளிநாட்களில் என்ன குறிக்கோள் வைத்திருந்திருப்பார்கள்? தொண்ணூறுகளில் படித்தவர்களுக்கு வலைத்தளம் மூலம் வியாபாரம் செய்வோம் என்று தெரியுமா? இன்று இ-காமர்ஸில் பணிபுரிபவர்கள் படிக்கும் காலத்தில் என்ன குறிக்கோள் வைத்து நினைத்துப் படித்திருப்பார்கள்? இன்று பள்ளியில் படிப்பவர்களுக்கு அடுத்த பத்து வருடம் கழித்து வரும் தொழில் நுட்பம் எப்படித் தெரியும்?

மாணவராக இருக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கை பற்றி குறிக்கோள் வைக்கவில்லை என்றால் பதற்றம் கொள்ள வேண்டாம்.

காரணம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் வெவ்வேறு அனுபவங்களால் நிச்சயிக்கப்படுகின்றன. குறிக்கோள் வைப்பது காதலிப்பது போல. காதல் சுகம். குறிக்கோள் நிறைவேறினால் நல்லது. ஆனால் காதலிக்காதது போல குறிக்கோள் இல்லாமை குற்றமில்லை. காதலிப்பவர்கள்போல குறிக்கோள் உள்ளவர்களுக்கு தோல்வி பயம் அதிகம். திறந்த மனதுடன் எந்த விஷயத்தையும் பார்க்க முடியாது. நிறைவேறாத காதலும் குறிக்கோளும் ஒரு தேக்க நிலையை வாழ்வில் உருவாக்கும். சிலர் அதிலேயே முடங்கியும் போகின்றனர்.

ஆனால் திறந்த மனதுடன் வருவதை எதிர்கொள்பவர்கள் கிடைத்த வேலையை குறிக்கோளாக்கி காதலிக்கலாம். வெற்றி பெறலாம். மனித வரலாறு முதல் இது தான் அதிகம் நிகழ்ந்திருக்கிறது.
இயற்பியலை கல்லூரியில் படிக்கும் காலத்தில் சத்யஜித்ரேக்கு சினிமா ஆசையோ படம் பார்க்கும் பழக்கமோ கூட கிடையாது. கார்டூனிஸ்டாகவே வர விருப்பம் கொண்ட பால் தாக்கரேவிற்கு சிறு வயதில் அரசியல் ஆர்வம் கிடையாது. எம்.பி.ஏ . படிக்கும் காலத்தில் கூட கிரிக்கெட் வர்ணனை தன் தொழிலாகும் என ஹர்ஷா போக்லேவிற்கு தெரியாது. படிப்பே வராது என்று கன்னத்தில் அறை வாங்கி காது செவிடான எடிசனுக்கு அறிவியல் மேதையாவோம் என்று தெரியுமா? ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின் விவசாயம் செய்து கொண்டிருந்த கேப்டன் கோபிநாத்துக்கு ஏர் டெக்கான் என்று ஒரு விமான சேவை ஆரம்பிப்போம் என்கின்ற எண்ணம் எப்பொழுது வந்தது?

குழந்தைகள் குறிக்கோள்கள் வைக்க மாட்டார்கள். கனவு காண்பார்கள். அவைகளில் சில பிற்காலத்தில் குறிக்கோள்களாக மாறலாம். உங்கள் பிள்ளை இத்தனை வயதாகியும் குறிக்கோள் வைக்கவில்லையே என்ற கவலை வேண்டாம். உங்கள் பிள்ளைக்கான இடம் இந்த உலகில் எங்கோ பத்திரமாக உள்ளது. அதை கண்டு கொள்வதற்கு அவன் நிகழ்த்தும் பயணத்திற்கான காலத்தையும் தூரத்தையும் அன்புடன் அனுமதியுங்கள்!

வேலை கிடச்சிருச்சு!
அந்த இளைஞன் டாடா ஸ்டீல் கம்பனியில் ஆஃபிஸ் அஸிஸ்டென்டாக சேர்ந்த சில நாட்களில் ஒரு சம்பவம். சில தொழிலாளிகள் மத்தியில் பெரும் கைகலப்பு ஏற்பட்டு சம்பந்தப்படாத மற்றவர்கள் அனைவரும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கையில் தைரியமாக உள்ளே நுழைகிறான் இந்த இளைஞன். ஆயுதத்தால் தாக்க வருபவனின் கையைப் பிடித்து நிறுத்தி “என்ன பிரச்சினை? வா, உட்கார்ந்து பேசலாம்” என்று அழைக்க, பத்து நிமிடத்தில் மொத்த கும்பலும் உட்கார்ந்து பேச ஆரம்பித்து சண்டையை முடித்துக் கொண்டது. மக்களை படித்து பிரச்சினைகளைத் தீர்க்கும் குணம் அந்த இளைஞனை 14 ஆண்டுகளில் பர்சனல் டைரக்டராக்கியது. பின் கூடுதல் நிர்வாக இயக்குனராகவும் குழுவின் ஆலோசகராகவும் ஆக்கியது. அவர் ருசி மோடி.
தொழிலாளர்களுடன் நெருங்கி உறவாடும் அவர் நிர்வாகப் பாணி பெரும் வெற்றியைத் தந்தது. ஒருமுறை தொழிலாளர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர் 16 ஆம்லட்டுகள் தின்றது இன்று விக்கிபீடியா வரை பிரபலம்!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி