ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை

ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்துடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறைதெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:


ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும்,மேலும் கார்டின் சி.வி.வி. எண் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது செல்போனுக்கு உடனுக்குடன் எஸ்.எம்.எஸ். வரும் வகையில் வங்கியில் இருந்து சேவையை பெற்றிருக்க வேண்டும். ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்னை ஏற்பட்டால், அடுத்த நபர்களின் உதவியைப் பெறக் கூடாது. மேலும் அந்த இயந்திரத்தில் கார்டை பொருத்தும் பகுதியில் ஏதேனும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் கருவி பொருத்தப்பட்டு இருந்தால், ஏ.டி.எம். கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.


அவசியம் எதுவும் இல்லாதபட்சத்தில் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஏ.டி.எம்.கார்டு பெறக் கூடாது. பெட்ரோல் பங்க், உணவகம்,சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சேவை ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத்தக் கூடாது. அங்கீகாரமற்ற முறையில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் நடைபெறுவதாக தெரிய வந்தால், உடனடியாக அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்க வேண்டும். கார்டை சோதனை செய்ய வேண்டியுள்ளது, பழைய கார்டை மாற்றி புது கார்டு தருகிறோம், கடன் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேசுவது போன்று கூறி கார்டின் ரகசிய எண், சி.வி.வி. எண் போன்ற தகவல்களைக் கேட்டால், அந்த தகவல்களைக் கூற வேண்டாம். ஏனெனில் எந்தவொரு வங்கியும் ரகசிய எண், சி.வி.வி.எண் ஆகியவற்றை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் உங்களது கார்டை அடுத்தவர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதி அளிக்காதீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி