அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த 2013 டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி (எண் 463), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், சென்னை கிண்டியில் உள்ள தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ("டேட்டா சென்டர்') ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த திட்டப் பணிகள் அனைத்தையும் தகவல் தொகுப்பு மையமே இனி மேற்கொள்ளும்.
எனவே, அரசு ஊழியர்கள் இனி தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் பெற, ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், கிண்டி என்ற முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.