நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கு இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தேச கௌரவச் சட்டம் 1971-இன் படி பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்துவது நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். இது சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். மேலும், மிக முக்கியமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் மட்டுமே காகிதத்தால் தயாரிக்கப்பட்ட கொடிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
இவற்றை அனைத்துக் கல்லூரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதோடு, இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.