
புதுடெல்லி,
ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தொடர்பான உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என்பது கோர்ட்டு உத்தரவை மீறும் விதமாக உள்ளது என்று எனக்கு கடிதம் வந்துள்ளது என்று நீதிபதி பி.எஸ். சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு கடிதத்தில் ஆதார் அடையாள அட்டை இல்லாததால் எனது திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றும் மற்ற கடிதங்கள் இதனால் சொத்துகளை பதிவு செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று உத்தரவிட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் "ஆதார் அட்டை கட்டாயம் என்று அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது. மேலும், அரசு அடையாள அட்டைக்காக பெறப்படும் தகவல்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுப்ரீம் கோர்ட்டு மும்பை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மும்பை ஐகோர்ட்டு கற்பழிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ.யுடன் யு.ஐ.டி.ஏ.ஐ. (இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம்) தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.