யார் தெரியுமா?...

கல்கத்தா மாநகரின் பரபரப்பான தெரு. தெரு ஓரத்தில் ஒரு செல்வந்தர் அலட்சியமாக நின்று கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்தவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். 

அவர் பேச்சில் கர்வம் தெரிந்தது. கையசைக்கும்போது விரல்களில் மோதிரங்கள் பளபளத்தன. அவர் அணிந்திருந்த ஆடம்பரமான உடைகள் மிகவும் அழகாக இருந்தன. அப்போது ஒரு பெண்மணி அவர் அருகே சென்றார். அவர் முகத்தில் கனிவு தெரிந்தது. புன்னகையுடன் அவர் செல்வந்தரிடம் கையேந்தினார்: ""ஐயா, நாங்கள் அனாதைகளுக்காக ஒரு இல்லம் நடத்தி வருகிறோம். உங்களைப்போன்ற பெரிய மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது ஐயா!ஏதாவது எங்களுக்கு உதவுங்களேன்." அந்தப் பெண்மணி உதவி கேட்டது, செல்வந்தருக்கு எரிச்சலாக இருந்தது. மிகவும் அருவருப்புடன் பட்டென்று காறித் துப்பினார். பெண்மணி ஏந்திய கரத்தில் அந்த எச்சில் விழுந்தது. ஆனால் அந்தப் பெண்மணி அசையவும் இல்லை, கைகளைப் பின்னால் இழுத்துக் கொள்ளவும் இல்லை. மாறாத புன்னகையுடன் மீண்டும் கேட்டார்: ""ஐயா, எனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி!தயவு செய்து அந்த அனாதைகளுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் ஐயா." அந்தப் பெண்மணியை எச்சில் துப்பி அவமானப்படுத்தி விட்டோம் என்று மகிழ்ந்திருந்த செல்வந்தர்அதிர்ந்தார். தன் செயலுக்கு வெட்கித் தலைகுனிந்து மெதுவாக அங்கிருந்து நகர்ந்தார். அந்தப்பெண்மணி யார் தெரியுமா? 

ஒரு விழா நடந்தது. அந்தப் பெண்மணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். விழா முடிந்ததும் விருந்து நடந்தது. தனக்குப் பசியில்லை, எதுவும் வேண்டாம் என்று கூறி அவர் சாப்பிடாமல் மறுத்துவிட்டார். விருந்து முடிந்து எல்லோரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். அப்போது அந்தப் பெண்மணி விருந்துத் தட்டுகளில் மீந்திருந்த உணவு வகைகளை எடுத்து ஒரு பைக்குள் போட்டுக்கொண்டார். எதிர்பாராமல் இதைப் பார்த்த விழா அமைப்பாளருக்கு ஒரே அதிர்ச்சி. அவர், ""ஏன் இதையெல்லாம் எடுத்துப் பைக்குள் போடுகிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு அந்தப்பெண்மணி சொன்னார்: ""இவையெல்லாம் வீணாகத்தானே போகும். இவற்றையெல்லாம் நான் எங்கள் அனாதை இல்ல ஏழைக்குழந்தைகளுக்காக எடுத்துச் செல்கிறேன். அவர்கள் இதுபோன்ற உணவு வகைகளைப் பார்த்ததுகூடஇல்லை." எங்கிருந்தாலும் எப்போதும் தன் அனாதை இல்லக் குழந்தைகள் நினைவாகவே இருக்கும் இந்தப்பெண்மணி யார்? 

அந்தப் பெண்மணி யுகோஸ்லா வியா நாட்டில் உள்ள சுகோப்ஜி எனும் ஊரைச் சேர்ந்தவர். இளமையில் துறவு பூண்டு இந்தியாவிற்கு வந்தார். கல்கத்தா நகரில் சேவை செய்தார். ஏழைகளையும், அனாதைகளையும் நேசித்தார். இறக்கும் தருவாயில் இருக்கும் முதியோருக்காக இல்லம் அமைத்தார்.எத்தனையோ விருதுகள் அவரைத் தேடி வந்தன. அனைவராலும் ""அம்மா" என்றே அழைக்கப்பட்டார். 

அவர்தான் அன்னை தெரேசா.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி