கிராமங்களில் புற்றீசல் போல் படையெடுப்பு எங்கும் போலி டாக்டர்கள்

எம்பிபிஎஸ் முடிப்பதுடன், குழந்தை, மகப்பேறு, காசநோய் என பல்வேறு சிறப்பு மருத்துவ படிப்புகளையும், முதுநிலை சிறப்பு மருத்துவமும் படித்துவிட்டு தனியாக மருத்துவமனை நடத்துபவர்களை விட அதிக வருமானம் பெறுபவர்களாக கிராமப்புறங்களுக்கு புற்றீசல் போல படையெடுக்கும் போலி டாக்டர்கள் உள்ளனர். ஒருவர் சராசரியாக 8ம் வகுப்போ, 10ம் வகுப்போ, பிளஸ் 2 படிப்போ அல்லது டிப்ளமோ இன் பார்மஸி முடித்துவிட்டு மருந்துக்கடைகளில் சேல்ஸ் மேனாகவோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் உதவியாளர்களாகவோ பல ஆண்டுகள் வேலை செய்த பின்னர், தங்களுக்கு தெரிந்த மருந்துகள் எந்தெந்த வியாதிகளுக்கு வழங்கப்படுகிறது என்ற அனுபவத்தை கொண்டு தனியாக கிளினிக் நடத்துபவர்களே போலி டாக்டர்கள் என்று அடையாளம் காட்டப்படுகின்றனர். மருத்துவ வசதி இல்லாத கிராமப்புறங்களிலேதான் கிளினிக்கை தொடங்குகின்றனர். ஜுரம், தலைவலி, வயிற்றுப்போக்கு, உடல்வலி, மூட்டு வலி என்று சாதாரண வியாதிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு இவர்கள் அளிக்கும் வீரியம்மிக்க மருந்துகளின் தன்மையால் வியாதி உடனே குணமாவதால் கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளுக்கு வரும் நம்பிக்கையே மூலதனமாகும்.

சாதாரண பாரசிட்டமால் மாத்திரை சாப்பிட்டாலே குணமாகும் ஜூரம், தலைவலிக்கு கூட அதனுடன் ஸ்டீராய்டு வகை மருந்துகளை கலந்து வழங்குகின்றனர். இதனால் விரைவில் நோய் குணமாவதால் அடுத்தடுத்து இவர்களிடம் கிராமத்தினரே அதிகமாக வருகின்றனர். அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் அவர்களுக்கு தெரிவதில்லை.
இது ஒருபுறம் என்றால் குறிப்பிட்ட நகர்ப்புற மருந்து கடைகளும், கிராமப்புற மருந்துக்கடைகளும் கூட கிளினிக்குகளாக மாறி சிகிச்சை அளிப்பதும் மறுபுறம் நடந்து வருகிறது. இதனை மருந்துக்கடைக்காரர்கள் கவுன்டர் சேல்ஸ் என்பார்கள். உரிய மூலப்பொருள் அளவு இல்லாத சாதாரண கம்பெனிகளின் மருந்துகளை இவர்கள் தங்களிடம் ஜுரம், உடல்வலி, கால் மூட்டு வலி, காயம் என்று வரும் அப்பாவிகளுக்கு அளித்து பணத்தை பிடுங்கும் வேலையை செய்கின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 1 லட்சம் பேர் குறைந்த கல்வித்தகுதியுடன் கிராமங்களில்தான் அலோபதி சிகிச்சை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. கிராம மக்களின் விழிப்புணர்வின்மையை பயன்படுத்தி போலியான டாக்டர்கள் புற்றீசல்கள் போல கிராமங்களை நோக்கியே படையெடுக்கிறார்கள். 

இவர்கள் தங்களது கிளினிக்குகளில் ஆஐஎம்பி, பிஎம்பி, எம்எம்பி என்பன போன்ற சான்றிதழ்களை பிரேம் போட்டு பார்வைக்கு வைத்திருப்பர். அந்த சான்றிதழ்களில் குறிப்பிடப்படும் கல்வி நிறுவனங்களின் உண்மை தன்மை என்பது கேள்விக்குறி. கிராமப்புற மக்களின் உயிரோடு விளையாடும் இந்த போலி டாக்டர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத்துறையோ, காவல்துறையோ அல்லது இந்திய மருத்துவ சங்கமோ, போலி டாக்டர்களை கண்டறியும் குழுவோ கண்மூடி மவுனம் சாதிப்பது எதற்காக? என்று சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வியாகும். இதுகுறித்து அரசு டாக்டர்கள் சிலரிடம் கேட்டபோது, போலி டாக்டர்கள் சாதாரண நோய்களுக்கு அளிக்கும் மருந்துகள் எல்லாம் சரியான அளவுதானா என்பது கேள்விக்குறி. நோயை சரியாக கணிக்காமல் அளிக்கும் மருந்து என்றால் சிக்கல்தான். நோயாளிகளுக்கு அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப, முறையாக படித்து பட்டம் பெற்று, மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற அலோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியும். இதுபோன்ற பணி செய்த அனுபவத்தை கொண்ட போலி டாக்டர்களால் உயிருக்கு ஆபத்துதான் மிஞ்சும். குறிப்பாக, நாங்களே நோயாளிக்கு வழங்க தயங்கும் மருந்துகளை கூட, குறிப்பாக ஸ்டீராய்டு வகை மருந்துகளை இவர்கள் தாராளமாக வழங்குகின்றனர். 

பொதுமக்களும் இவர்களிடம் சென்று எதிர்கால விளைவுகளை பற்றி அறியாமல் சிகிச்சை எடுக்கின்றனர். எம்.பி.பி.எஸ் பட்டம் பெறாமல் அலோபதி சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது அரசு உரிய நடவடிக்கையை தொடர்ந்து நிரந்தரமாக எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். அதோடு சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி படித்தவர்கள் அலோபதி மருத்துவமான ஆங்கில மருத்துவமுறையை கையாளக்கூடாது என்பது மருத்துவ விதி. அதேபோல், அலோபதி டாக்டர்களும் மேற்கண்ட பாரம்பரிய சிகிச்சை முறைகளை கையாளக்கூடாது. இவ்வாறு இருக்கும்போது, மருத்துவமே படிக்காதவர்கள் நாங்கள் பாரம்பரிய ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் என்றுகூறிக் கொள்வதும், அந்த முகமூடியுடன் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவ சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றம். ஆகவே, பொதுமக்களிடம் இவர்கள் குறித்த விழிப்புணர்வை பெரிய அளவில் ஏற்படுத்துவது அவசியம்‘ என்றனர்.


கூண்டோடு ஒழிக்க வேண்டும்

இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: கடுமையான தண்டனைகள் மற்றும் சட்டங்கள் இல்லாதது மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் தான் போலி மருத்துவர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. போலி மருத்துவர்களாக அடையாளம் கண்டு கைது செய்யப்படுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது மற்றும் 6 மாத சிறை தண்டணை மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எளிதாக அபராதத்தை கட்டி விட்டு மீண்டும் வேறு இடங்களுக்கு சென்று முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். போலி மருத்துவர்கள் குறித்த குற்றச்சாட்டு எழும்போது மட்டுமே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். போலி மருத்துவர்களை கூண்டோடு ஒழிக்க போலி மருத்துவர்கள் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்து 3 வருட தண்டணை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் போலி மருத்துவர்களை ஒழிக்க முடியும்.


போலி டாக்டர் பட்டியலில் தர்மபுரி முதலிடம்

தமிழகம் முழுவதும் 30,000 போலி மருத்துவர்களுக்கு மேல் உள்ளதாகவும், கிராமங்கள் நிறைந்த தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் போலி டாக்டர் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 9 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். கிராமப்புறம் மட்டுமின்றி நகர்புறங்களில் கூட போலி டாக்டர்களின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. முறையாக எம்.பி.பி.எஸ் படிக்காமல் டாக்டரிடம் கம்பவுண்டர், வார்டுபாய் போன்ற வேலை செய்த அனுபவத்தின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போலி டாக்டர்கள் சிறிய அளவில் கிளினிங் நடத்தி வருகின்றனர். ஏழை மக்களின் உயிருடன் விளையாடும் இவர்களுக்கு கிராமப்புறங்களில் மவுசும் அதிகமாக உள்ளது.

மக்களிடம் விழிப்பு இல்லை

இந்திய மருத்துவ சங்க வேலூர் கிளை நிர்வாகி டாக்டர் குமரனிடம் கேட்டபோது, Ôமருத்துவ சங்கத்தில் போலி டாக்டர்களை கண்டறியும் குழு உள்ளது. எங்களிடம் புகார்கள் வந்தால் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கிறோம். இந்த விஷயத்தில் அரசுடன் ஒத்துழைக்கவும் தயாராக உள்ளோம். எனவே, அரசு எங்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குவதுடன் ஒத்துழைப்பும் வழங்கினால் நிச்சயம் போலி டாக்டர்களை கட்டுப்படுத்துவது அல்ல ஒழிக்க முடியும். அதோடு, மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் மருத்துவ வசதியை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் போலி டாக்டர்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்Õ என்று கூறினார்.

ஸ்டீராய்டு வகை மருந்துகள்...

பொதுவாக ஸ்டீராய்டு வகை மருந்துகள் அத்தியாவசியமான உயிர்காக்கும் மருந்துகள் ஆகும். நமது உடலிலேயே ஸ்டீராய்டு சுரப்பிகள் உள்ளன. இவைகள் நாம் உடல் உபாதைக்காக எடுத்துக் கொள்ளும் மருந்தை கிரகித்துக் கொள்ள உதவுவது. இந்த ஸ்டீராய்டு வகை மருந்துகள் ஆபத்தான காலங்களிலோ அல்லது அத்தியாவசியமான நேரங்களிலோ நோயாளிகளுக்கு டாக்டர்களால் பயன்படுத்தப்படும். இந்த வகை மருந்துகளை அடையாளம் காண, அந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அந்த மருந்து அட்டைகள் மீதோ அல்லது பெட்டிகள் மீதோ சிவப்பு கோடு போட்டிருக்கும். இந்த மருந்துகளை கண்டிப்பாக டாக்டரின் ஆலோசனைப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாசகம் இடம்பெற்றிருக்கும். உதாரணத்துக்கு, டெக்ஸா மெத்தசோன், குளோரோபெனரமின் போன்ற மருந்துகள். இவைகளை தொடர்ந்து பயன்படுத்தும்போது பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி