12ம் வகுப்பு கணிதத்தேர்வில் அச்சுப்பிழையுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் அளிப்பது குறித்து விடைத்தாள் திருத்துவதற்கு முன்னர்தான் முடிவு செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 3–ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. விடைத்தாள்களை திருத்தும் பணி 24ம் தேதி 66 கல்வி மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடைபெற உள்ளது. அதற்காக விடைத்தாள்கள் மிக பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கணிதத்தேர்வில் 2 கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாகவும், ஒரு கேள்வி அச்சுப்பிழையுடன் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அளித்த விளக்கம் வருமாறு:12ம் வகுப்பு தேர்வையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் எந்தவித குறையும் இன்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. 12ம் வகுப்பு கணிதத்தேர்வில் 15 கேள்விகள் கொடுத்து அதில் 10 கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியாக விடை அளித்தால் 6 மதிப்பெண் வழங்கப்படும்.ஆனால் 15 கேள்விகளில் ஒரு கேள்வி மட்டும் அச்சுப்பிழையுடன் இருந்தது. அந்த கேள்விக்கு எத்தனை மாணவர்கள் பதில் அளிக்க முயற்சி செய்துள்ளார்கள் என்று தெரியவில்லை.
ஒவ்வொரு பாடத்திற்கும் வினாக்களை சரிபார்த்து மதிப்பெண் அளிப்பது குறித்து ஒரு குழு வழக்கமாக அமைக்கப்படுவது உண்டு. அதுபோல கணிதபாடத்திற்கும் குழு அமைக்கப்படும். இது விடைத்தாள் திருத்துவதற்கு சற்று முன்னதாகத்தான் அமைக்கப்படும்.கணிதத்தேர்வில் அந்த குறிப்பிட்ட கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது.
எனவே அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் கருணை மதிப்பெண்ணாக முழு மதிப்பெண் அளிக்கலாமா? என்பது பின்னர்தான் முடிவு செய்யப்படும். மாணவர்கள் எந்த அளவிலும் பாதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.