எம்.ஏ.பட்டம் படித்து முடித்த பிறகு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவருக்கு 4 வாரங்களுக்குள் முதுகலை உதவி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வி.கனிமொழி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: முதுகலை உதவி ஆசிரியர் தமிழ்த் துறை பணிக்காக நான் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வில் பங்கேற்றேன். அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் எனக்கு அழைப்பு விடுத்தது.
சரிபார்ப்பு பணிகள் முடிந்த பிறகு வெளியான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கேட்டபோது, 2009-ஆம் ஆண்டு அரசாணைப்படி நான் முறையான வரிசையில் எனது படிப்பை படிக்கவில்லை என என்னை நிராகரித்ததாக தெரிவித்தனர். எனக்கு முதுகலை உதவி ஆசிரியர் பணி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் பிளஸ் 2 வில் தேர்ச்சி பெறாமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.,பட்டம் படித்துள்ளார். அதன் பிறகு, வழக்கமான முறையில் பி.எட்., மற்றும் எம்.ஏ. பட்டங்கள் முறையாக பெற்றுள்ளார்.
2009-ஆம் ஆண்டு அரசாணையில், விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, அதன் பிறகு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு இதே போன்று மற்றொரு வழக்கில், பின்வரிசை முறையில் படித்திருந்தால் அது ஒரு பெரிய விஷயம் இல்லை என தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், நீதிமன்ற உத்தரவின் நகல் பெற்ற நாள் முதல் நான்கு வாரங்களுக்குள் மனுதாரருக்கு பணி வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.