பிளஸ்–2 வேதியியல் தேர்வு மிக எளிதாக இருந்தது கட்டாய கேள்விகளும் சுலபமாகவே இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்து

பிளஸ்–2 மாணவர்களுக்கு நேற்று நடந்த வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகள் மிக எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

வேதியியல் தேர்வு
தமிழகம் முழுவதிலும் இருந்து 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதும் பிளஸ்–2 தேர்வு கடந்த 3–ந்தேதி தொடங்கியது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள், இயற்பியல், பொருளாதாரம், கணிதம், விலங்கியல் ஆகிய தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வுகள் நடந்தன.
என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கு வேதியியல் பாடத்தில் எடுக்கப்படும் மதிப்பெண் முக்கியமானது. அதுபோல வணிகம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு பொருளியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் போன்ற பாடங்களில் எடுக்கும் மதிப்பெண் முக்கியம்.

குறியீட்டு முறையால்...
மற்ற தேர்வுகளை காட்டிலும், வேதியியல் தேர்வு மாறுபட்டதாகும். கணக்கு போட்டு பார்ப்பது, கதை வடிவில் பதில் எழுதுவது, உரைநடை, கட்டுரை என இல்லாமல் அமிலங்கள், தனிமங்கள், சேர்மங்கள் என முற்றிலும் குறியீட்டு முறையால் எழுதப்படுவது வேதியியல் தேர்வாகும்.

எனவே ஒவ்வொரு ஆண்டும் மற்ற தேர்வுகளை காட்டிலும் வேதியியல் தேர்வில் தான் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கும். 200–க்கு 200 மதிப்பெண்கள் எடுப்போரின் விகிதமும் குறைவாகவே இருக்கும்.
ஆனால் நேற்று தேர்வு முடிந்ததும் மாணவ–மாணவிகள் உற்சாக துள்ளலுடன் தேர்வு அறைகளை விட்டு வெளியே வந்தனர். பலர் ‘‘நான் நிச்சயம் 200–க்கு 200 மதிப்பெண்கள் வாங்கிவிடுவேன்’’ என்று கூறியவாறே சென்றனர்.

மதிப்பீட்டு வினாக்களில் இருந்தே...
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி ஜே.ஹர்ஷனபிரியா கூறியதாவது:–
தேர்வு அறையில் வினாத்தாளினை கையில் வாங்கிய உடனேயே, எதிர்பார்த்த கேள்விகள் இருந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மார்க் கேள்விகள் பெரும்பாலும் மதிப்பீட்டு வினாக்களில் இருந்தே கேட்கப்பட்டு இருந்தது. சில வினாக்கள் மட்டும்தான் பாடங்களில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அதேபோல 5 மற்றும் 10 மதிப்பெண்கள் வினாக்கள் மிகவும் எளிதாகவே இருந்தன. புத்தகத்தை நன்கு படித்து இருந்தாலே போதும், இந்த தேர்வில் கட்டாயம் 160 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுவிடலாம்.
இவ்வாறு மாணவி ஹர்ஷனபிரியா கூறினார்.

கட்டாய கேள்விகள்
சென்னை அம்பத்தூர் சேதுபாஸ்கரா மேல்நிலைப்பள்ளி மாணவர் அருணாச்சலம் கூறும்போது, ‘‘வேதியியல் தேர்வு மிக எளிதாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளாகவே இருந்தது. 3 மார்க் கேள்விகள் மிக எளிதாகவும், விரைவாகவும் எழுதும் வண்ணம் வினாத்தாளில் இடம்பெற்று இருந்தது. கட்டாய கேள்விகள் மிகவும் எளிதாகவே கேட்கப்பட்டு இருந்தன. மொத்தத்தில் இந்த தேர்வு மிக எளிதாக இருந்தது. சராசரி மாணவர்கள் கூட 150–க்கு மேல் வாங்குவது உறுதி’’, என்றார்.

கணக்குப்பதிவியல்
புதுப்பேட்டை ஆர்.பி.ஏ.என்.சி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வி.சசிகலா, எஸ்.பிரியா, டி.பிரதீபா, எஸ்.இந்துமதி ஆகியோர் கூறியதாவது:–

கணக்குப்பதிவியல் தேர்வு எளிதாகவே இருந்தது. கேள்விகள் அனைத்தும் படித்த பாடத்திலிருந்தும், பொதுவான வினாக்களாகவும் வந்திருந்தன. இதனால் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 20 மார்க் வினாக்கள் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளதாகவே இருந்தது. இந்த தேர்வில் எங்களில் நிறைய பேர் 200–க்கு 200 எடுப்போம்.
இவ்வாறு மாணவிகள் கூறினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி