அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஏப்ரல் 1ம்தேதி முதல் நேர்க்காணல் நடைபெறவுள்ளது. இதில் உரிய ஆவணங்களுடன் ஓய்வூதியர்கள் கலந்து கொள்ள வேண்டும் கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஓய்வூதியர்கள் மற்றும் இதர மாநில அரசு ஓய்வூதியம் பெறும் சிவில் மற்றும் சிவில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2014ம்ஆண்டிற்கான நேர்க்காணல் ஏப்ரல் 1ம்தேதி முதல் ஜூன் 30ம்தேதி வரை நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள் மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் தங்களுடைய ஓய்வூதிய புத்தகம், தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்க்காணலுக்கு வரலாம்.
சிவில் ஓய்வூதியம், ஆசிரியர் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய வருமானவரி நிரந்தர கணக்கு எண், 2014-15ம்நிதியாண்டிற்கான வருமான வரி முன்பணம் செலுத்தியிருந்தால் அதற்கான ரசீது, உத்தேச வருமானவரி கணக்கீட்டு தாள் ஆகியவற்றுடன் வரவேண்டும். தகுதியான சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் வருமானவரி பிடித்தம் செய்யப்பட்ட ரசீதுடன் நேர்க்காணலுக்கு வரவேண்டும். ஈரோடு மாவட்டத்தில் வங்கிகள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பாரத வங்கியில் ஏப்ரல் 1ம்தேதி முதல் 15ம்தேதி வரையும், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏப்ரல் 16ம்தேதி முதல் 30ம்தேதி வரையும், இந்தியன் வங்கி மற்றும் இதர வங்கிகளில் மே 2ம்தேதி முதல் 31ம்தேதி வரையும், மற்ற அனைத்து வங்கிகளிலும் ஜூன் 1ம்தேதி முதல் 30ம்தேதி வரையும் நேர்க்காணல் நடத்தப்படவுள்ளது. நேர்க்காணலுக்கு வர இயலாத ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கு அத்தாட்சியாக வாழ்நாள் சான்றிதழ், வங்கி மேலாளரிடமிருந்து பெறப்பட்டு சான்றினை பெற்று சம்பந்தப்பட்ட கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.