உரிய ஆவணங்களை வைத்திருக்கும் வியாபாரிகள் 10லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளால் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் கூறியதால் நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.
பணம் எங்கிருந்து பெறப்பட்டதற்கான ஆவணம், முந்தைய வர்த்தக நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று பிரவீன்குமார் குறிப்பிட்டுள்ளார். இவற்றை வைத்திருக்கும் வணிகர்கள் 10 லட்சம் ரூபாய் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வணிகர்களின் கோரிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் பேசி விதியை தளர்த்தி இருப்பதாகவும் பிரவீன்குமார் கூறினார். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்க பணம் மற்றும் பொருட்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணைக்குப் பின் ஒப்படைத்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், நாமக்கல் மாவட்ட வர்த்தகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், ஆவணங்களை காட்டி 10 லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.